2-வது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு: சுயசார்பு தேசமாக இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் மோடி கதாநாயகன் – உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம்

Spread the love

நரேந்திரமோடி பிரதமராக 2-வது முறை பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து சுயசார்பு தேசமாக இந்தியாவை முன்னெடுத்து செல்வதில் கதாநாயகனாக திகழ்வதாக நரேந்திரமோடிக்கு உள்துறை மந்திரி அமித்ஷா புகழாரம் சூட்டி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் கடந்த 6 ஆண்டுகளில் கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் பாராட்டுக்கு உரியதாக உள்ளது. இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.

நிச்சயமற்ற ஐந்து என்ற நிலையில் இருந்த இந்தியப் பொருளாதாரத்தை, பயங்கரவாதத்தின் நிழலில் இருந்து மீட்டு, இந்தப் பிரச்சினைக்கு எதிராக உறுதியான போருக்கு நாட்டை தயார் படுத்தியது, கழிவறை சுத்தத்தை ஒரு பழக்கம் மற்றும் கலாச்சாரமாக உருவாக்கியது, கிராமங்கள் மற்றும் ஏழை விவசாயிகளின் வாழ்வை உண்மையிலேயே முன்னேற்றம் காணச் செய்வதற்கு உறுதி ஏற்பது ஆகிய விஷயங்களில்,

சவால்கள் அனைத்தையும் வாய்ப்புகளாக மாற்றியதை மோடி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் மக்கள் பார்த்தார்கள்.

2-வது ஆட்சிக்காலத்தின் முதலாவது ஆண்டு, மக்களின் கனவுகளை நனவாக்கும் உத்தரவாதத்தை அளிப்பதாக அமைந்து உள்ளது. அரசியல் சட்டப் பிரிவுகள் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ஜம்முகாஷ்மீரில் ரத்து செய்தது, ராமர் கோவில் கட்டுவதற்கு வழி அமைத்து கொடுத்தது, முத்தலாக் என்ற சாபத்தில் இருந்து முஸ்லிம் பெண்களுக்கு விடுதலை கொடுத்தது, குடிமக்கள் திருத்த சட்டத்தின் மூலம் சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்பட்ட பிரிவினருக்கு குடியுரிமை கிடைக்க வழி செய்தது போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எல்லாம் இந்த ஓராண்டு காலத்தின் முக்கிய மைல்கற்களாக உள்ளன.

விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில்முனைவோருக்கு ஓய்வூதியத் திட்டங்கள், ஜல் சக்தி என்ற புதிய அமைச்சகம் உருவாக்கம், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம், குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கும் முடிவு, வளரத் துடிக்கும் மாவட்டங்களுக்கான வளர்ச்சித் திட்டம், திறந்தவெளிக் கழிப்பறைகள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டம் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தி உள்ளன.

கொரோனாவுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை குறிப்பிடாவிட்டால், மோடியின் 2-வது ஆட்சிக் காலத்தின் சிறப்புகள் முற்றுப் பெறாமல் போய்விடும். இந்த நோய்த் தாக்குதலின் சவாலை எதிர்கொள்வதில் உலகிற்கு மாறுபட்ட ஒரு பாதையை நரேந்திர மோடியின் தலைமை காட்டி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பொருளாதாரத்தில் மேம்படவும், வேலைவாய்ப்பு பெறவும், வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கு உதவவும் ரூ.20 லட்சம் கோடிக்கும் அதிகமான சிறப்புப் பொருளாதார தொகுப்பு திட்டங்களை மோடி அரசு அறிவித்துள்ளது.

இவை தற்சார்பு இந்தியாவுக்கான புதிய உதயமாக அமைந்துள்ளன. இதுவரையில் ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள், விதவையர், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் மூலம் 2 மாதங்களில் ரூ.60 ஆயிரம் கோடிக்கும் மேலான தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஏழைகளுக்கு 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கு ரூ.40 ஆயிரம் கோடி சிறப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பலமான புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான திட்டமிட்ட அணுகுமுறையாக மட்டுமின்றி, தற்சார்பு இந்தியா என்ற உறுதியை காட்டுவதாகவும் இவைஅமைந்துள்ளன.

முழு உடல் பாதுகாப்புக் கவச உடைகள், வென்டிலேட்டர்கள், என்-95 முகக்கவச உறைகளை முழுமையாக ஏப்ரல் மாத தொடக்கம் வரை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். இப்போது அவற்றை அதிக அளவில் நாமே உற்பத்தி செய்யும் நிலையை எட்டி உள்ளோம். இப்போது, சுமார் 5 லட்சம் பாதுகாப்பு கவச உடைகள், 2½ லட்சம் என்-95 முகக்கவச உறைகள் இந்தியாவில் தினமும் தயாரிக்கப்படுகின்றன.

சந்தை விலையை விட மிகவும் குறைந்த செலவில் இந்தியாவில் பல நிறுவனங்கள் வென்டிலேட்டர்களை தயாரிக்க தொடங்கி உள்ளன. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா படுக்கைகள் தயார்செய்யப்பட்டுள்ளன. இப்போது தினமும் 1½ லட்சம் பேருக்கு கொரோனா மருத்துவப் பரிசோதனை செய்யும் திறனை பெற்றிருக்கிறோம்.

நெருக்கடியான சமயங்களில், 55-க்கும் மேற்பட்டநாடுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை அளித்துள்ளோம். அதற்கு அனைத்து நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. சரியான நேரத்தில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டதால், கொரோனா பரவும் வேகம் பெருமளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி நேரத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு, சுதேசி மற்றும் தற்சார்பு என்ற முழக்கத்தின் மூலம் நாட்டின் மனசாட்சியை பிரதமர் நரேந்திர மோடி தட்டி எழுப்பியுள்ளார்.

அதே சமயத்தில், உள்ளூர் பொருளுக்கு குரல் கொடுப்போம் என்ற முழக்கத்தின் மூலம், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்களை ஆதரிக்க வேண்டியதை அவர் வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில், தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் கவனமாக முன்னேறிச் செல்வதால், இந்தியா உண்மையிலேயே சுதந்திரமாக செயல்பட வழி ஏற்படும். அவருடைய தலைமையின் கீழ், சுரண்டல் இல்லாத ஒரு தேசம் என்ற நிலையை நோக்கி இந்தியா முன்னேறும். கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவ வசதிகளில் சமமான மற்றும் உரிய வாய்ப்புகள் கிடைக்கும்.

எல்லோருக்கும் முன்னேற்றத்தின் பலன்கள் கிடைக்கும். ஆறு தசாப்த காலங்களில் ஏற்பட்ட இடைவெளிகளை கடந்த ஆறு ஆண்டுகளில் பூர்த்தி செய்து சுயசார்பான தேசமாக இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தப் பயணத்தின் கதாநாயகனாக இருக்கிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page