பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தான் என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை,
ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத், மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. கொரோனா ஊரடங்கால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள தற்போது வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் பயிர்களை நாசம் செய்து வருவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரே நாளில் 200 கிலோ மீட்டர் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந்தது ஆகும்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் நேரலகிரி ஊராட்சியில் உள்ள எருக்கன் செடிகளிலும், வாழை மரங்களிலும் நேற்று மாலை நூற்றுக்கணக்கான வெட்டுக்கிளிகள் இருந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் இரவு நேரமானதால் யாரும் அந்த பகுதியில் செல்ல முடியவில்லை. இதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) வேளாண்மைத்துறை அதிகாரிகள் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
வெட்டுக்கிளிகளை அழிக்க 3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டுள்ளன. வெட்டுக்கிளி வந்தால் அதனை அழிப்பதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வாரியாக வேளாண், தீயணைப்பு அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும். வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகமாக உள்ளது. பீகார், ஒடிசா வரை வெட்டுக்கிளி தாக்குதல் இருக்கலாம் என தேசிய அமைப்பு எச்சரித்துள்ளது.
பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு தான். பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஜூலை வரை இருக்கும், ஆனால் ராஜஸ்தானில் தான் இது இருக்கும். ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநில எல்லைகளை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.