சென்னை :
சென்னை உயர் நீதிமன்றத்தில், நாளை(ஜூன் 1) முதல், காணொலி காட்சி வழியாக, வழக்குகளை, நீதிபதிகள் விசாரிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், நீதிமன்ற பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. அவசர வழக்குகளை மட்டுமே, காணொலி காட்சி வழியாக, நீதிபதிகள் விசாரித்தனர். ஏப்ரல் மாதம் முழுவதும், இதே நிலைதான் நீடித்தது. மே மாத கோடை விடுமுறை ரத்து செய்யப்பட்டு, கூடுதல் எண்ணிக்கையில், நீதிபதிகள் இயங்கினர். நீதிமன்றம் வராமல், வீட்டில் இருந்தபடி, காணொலி காட்சி வழியாக, அவசர வழக்குகளை விசாரித்தனர்.
நாளை முதல், உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் முழு அளவில் இயங்க உள்ளனர். நீதிமன்றத்துக்கு வந்து, வழக்குகளை விசாரிக்க உள்ளனர். காணொலி காட்சி வழியாகவே, இந்த விசாரணை நடக்க உள்ளது. வழக்கறிஞர்கள், அவரவர் இடத்தில் இருந்து, வாதங்களை முன்வைக்க வேண்டும். உயர் நீதிமன்றத்துக்குள் வர, தற்போது அனுமதி இல்லை. வழக்கு ஆவணங்கள் எல்லாம், நீதிமன்றத்தில் இருப்பதால், நீதிபதிகள் வர வேண்டியுள்ளது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மனுக்களை உரிய ஆவணங்களுடன், ‘இ – மெயில்’ வாயிலாக, வழக்கறிஞர்கள், வழக்காடிகள், காலை, 10:00 முதல் பிற்பகல், 1:30 மணிக்குள் அனுப்ப வேண்டும். வழக்கு தாக்கல், விசாரணை தேதி, உத்தரவு பற்றிய விபரங்களை, தொலைபேசி வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்’ என, கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் கூறும்போது, ”வழக்கு விசாரணையின் போது, வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராக அனுமதிக்க வேண்டும். வழக்கு ஆவணங்கள் பெரும்பாலும், வழக்கறிஞர்களின் அறைகளில் இருக்கும். அதனால், அறைகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு முன்கூட்டி தகவல் அளிக்க வேண்டும்,” என்றார்.