5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 17-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தேர்தல் நடைபெற உள்ளது.
நியுயார்க்,
15 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகள் ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் பொதுச்சபை, 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களை (மொத்தம் 10 பேரில்) 2 ஆண்டு காலத்துக்கு தேர்வு செய்கிறது. இந்த 10 இடங்களில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளுக்கு 5, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு 2 மற்றும் மேற்கு ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு 2 என இட ஒதுக்கீடு அமைந்துள்ளது.
இந்த ஆண்டில் 5 நிரந்தரமற்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் வரும் 17-ந் தேதி நடக்கிறது. 2021, 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு உறுப்பினர் பதவி வகிப்பதற்கான இந்த தேர்தலில் ஆசிய, பசிபிக் பிரிவில் இந்தியா போட்டியில் உள்ளது. இந்த பிராந்தியத்தில் இந்தியா மட்டுமே போட்டி போடுவதால் அதன் வெற்றி உறுதியாக உள்ளது.
இந்தியாவின் வேட்பு மனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களை கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புதிய ஏற்பாடுகளின்படி ஓட்டெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுச்சபை மண்டபத்தில் நடக்கிற தேர்தலில் 193 நாடுகளும் ரகசிய வாக்குச்சீட்டு மூலம் ஓட்டு போட முடியும். மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கான 2 இடங்களுக்கு கனடா, அயர்லாந்து, நார்வே நாடுகள் போட்டி போடுகின்றன. லத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளுக்கான ஒரு இடத்துக்கு மெக்சிகோ மட்டுமே களத்தில் நிற்கிறது. ஆப்பிரிக்க்க நாடுகளுக்கான இடத்துக்கு கென்யாவும், ஜிபூட்டியும் போட்டி போடுவதாக தகவல்கள் கூறுகின்றன.