கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு உலக பிரபலங்கள் அழைப்பு

Spread the love

கொரோனாவுக்கு எதிராக போராட ரூ.187 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு, உலக பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகம் இன்றைக்கும் அலறுகிறது.

அந்தளவுக்கு அந்த கண்ணுக்கு தெரியாத வைரஸ் உலகத்தையே தன் பிடிக்குள் கொண்டு வந்து ஆட்டுவித்து கொண்டிருக்கிறது.

நேற்று மாலை நிலவரப்படி இந்த வைரஸ் 188 நாடுகளில் கால் பதித்திருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையம் சொல்கிறது. அந்த நாடுகளில் 62 லட்சத்து 89 ஆயிரத்து 259 பேர் இந்த வைரசின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 3 லட்சத்து 76 ஆயிரத்து 77 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலக பொருளாதாரம் வீழ்ந்து அதலபாதாளத்தில் கிடக்கிறது. பல கோடிப்பேர் வேலைகளை இழந்து இருக்கிறார்கள். வாழ்வாதாரத்தை தொலைத்திருக்கிறார்கள்.

இந்த வைரசை பூமிப்பந்தில் இருந்து ஒழித்துக்கட்டுவதற்கு பெருமளவில் ஆராய்ச்சிகள், சுகாதார நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. அதோடு விழுந்து கிடக்கிற பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதற்கும் பெரும் நிதி வேண்டும்.

இதற்காக ஜி-20 உச்சி மாநாடு கூட்டப்பட வேண்டும்; 2½ டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.187 லட்சம் கோடி) நிதி திரட்டப்பட வேண்டும் என்று உலகின் செல்வாக்குமிக்க பிரபலங்கள் 225 பேர், ஜி-20 நாடுகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய பொருளாதார வல்லுனர் அமர்தியா சென், உலக சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் பொருளாதார வல்லுனர் கவுசிக் பாசு, இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்கள் கார்டன் பிரவுன், டோனி பிளேர், ஐ.நா.சபையின் முன்னாள் பொதுச்செயலாளர் பான் கி மூன், ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள் தலைவர் மரியா பெர்னாண்டா எஸ்பினோசா, இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, தேசிய பயன்பாட்டு பொருளாதார கவுன்சிலின் தலைவர் சுமன் பெரி உள்ளிட்ட 225 பிரபலங்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.

இந்த கடிதத்தில் அவர்கள் வலியுறுத்தி கூறி இருப்பதாவது:-

வரும் நவம்பர் மாதம் ஜி-20 உச்சி மாநாடு சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில் நடத்த முடிவாகி இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் விவகாரத்தில் உடனடி பதிலளிப்பு தேவையாக இருக்கிறது. ஏழை நாடுகள் இந்த கொடிய வைரசை எதிர்கொள்வதற்கு 2½ டிரில்லியன் டாலர் (சுமார் ரூ.187 லட்சம் கோடி) நிதி தேவைப்படுகிறது.

44 கோடி மக்கள் வறுமையை எதிர்கொள்கிறார்கள். 26½ கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாடை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் என்ற உலகளாவிய பேரிடரை, பொருளாதார பேரழிவை தவிர்ப்பதற்கான நேரம் கடந்து கொண்டிருக்கிறது.

ஜி-20 உச்சி மாநாடு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் மேலும் மோசம் அடையும். எல்லா பொருளாதாரங்களையும், உலகத்தையும் பாதிக்கும். மிகவும் ஓரங்கட்டப்பட்ட, ஏழ்மையான மக்கள் மற்றும் நாடுகளை அதிகமாக பாதிக்கும்.

உலகின் மொத்த உற்பத்தியில் 85 சதவீத பங்களிப்பை செய்கிற ஜி-20 நாடுகள், தேவையான அளவுக்கு வளங்களை திரட்டுவதற்கு வழிவகுக்கும் திறன் கொண்டவை. எனவே ஜி-20 உச்சி மாநாட்டை தலைவர்கள் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இதுவே ஜி-20 உச்சி மாநாட்டை கூட்டுவதற்கான சரியான நேரம் ஆகும். அதில் ஒரு செயல்திட்டம் வகுத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நமது உலகம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறது. எனவே இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடியின் விளைவுகளை சந்திக்கிற நாடுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்கான அவசரத்தை அடிக்கோடிட்டு காட்டவே இந்த கடிதம் எழுதுகிறோம்.

இந்த நூற்றாண்டில் முதல்முறையாக வறுமை அதிகரித்து வருகிறது.

ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஏழைநாடுகள் உடனடி நிவாரண நடவடிக்கையை கோருகின்றன. கொரோனா வைரசுக்கு எதிரான பதில் நடவடிக்கைதான், உலகளாவிய பொருளாதாரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். கொரோனா வைரசுக்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. தடுப்பூசிகளை உருவாக்கி, பெரும்பான்மையான மக்களுக்கு செலுத்தும் அளவு தயாரித்து, சமமான வினியோகத்தை உறுதி செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த கடிதம் ஜி-20 தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஜி-20 அமைப்பின் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா, சவுதி அரேபியா, அமெரிக்கா, இந்தியா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, அர்ஜெண்டினா, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, தென்கொரியா, இந்தோனேசியா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page