அமெரிக்காவில் கருப்பு இனத்தவர் கொலையால் பரவி வரும் வன்முறை போராட்டத்தை அடக்க ராணுவம் களம் இறக்கப்படும் என ஜனாதிபதி டிரம்ப் எச்சரித்துள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் கருப்பர் இன மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள மினியாபொலிஸ் நகரில் கடை ஒன்றில் 20 டாலர் கள்ள நோட்டை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவரை கைது செய்ய போலீசார் கடந்த 25-ந் தேதி நடவடிக்கை எடுத்தனர். அப்போது போலீசாரின் பிடியில் அவர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கருப்பர் இனத்தவர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதில் நீதி வழங்கக்கோட்டு மினியாபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் 140 நகரங்களுக்கு பரவியது. இந்த போராட்டங்களில் வன்முறை வெடித்து தாண்டவாடி வருகிறது. போலீஸ் வாகனங்கள், கட்டிடங்கள் எரிக்கப்படுகின்றன. கடைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன.
40 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவில் சமீப காலங்களில் இப்படி ஒரு போராட்டம் நடந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதற்கு மத்தியில் வாஷிங்டன் வெள்ளை மாளிகை ரோஜா கார்டனில் இருந்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும், நாட்டில் பாதுகாப்பை ஏற்படுத்தவும், அமெரிக்காவை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
கவவரத்தையும், கொள்ளையடிப்பதையும், தீ வைப்பதையும், அழிவுகளை ஏற்படுத்துவதையும் முடிவுக்கு கொண்டு வருவதற்கும், சட்டத்தை பின்பற்றி வாழ்கிற மக்கள் உரிமைகளை பாதுகாப்பதற்கும் அனைத்து கூட்டாட்சி வளங்களையும், பொதுமக்களையும், ராணுவத்தையும் திரட்டி இருக்கிறேன்.
போதுமான அளவுக்கு தேசிய படையினரை நிறுத்துவதற்கு ஒவ்வொரு கவர்னருக்கும் நான் கடுமையாக பரிந்துரை செய்து இருக்கிறேன். வன்முறையை தணிக்கும் வரையிலும், சட்ட அமலாக்க இருப்பை மேயர்களும், கவர்னர்களும் ஏற்படுத்த வேண்டும்.
ஒரு நகரம் அல்லது மாகாணம் அவர்களது மக்களை தற்காத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க மறுத்தால், நான் அமெரிக்க ராணுவத்தை அனுப்புவேன். பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பேன்.
சமீப நாட்களாக நாடு தொழில்முறை அராஜகவாதிகள், வன்முறை கும்பல்கள், தீக்குளிப்பவர்கள், கொள்ளையர்கள், குற்றவாளிகள், கலவரக்காரர்கள் உள்ளிட்டவர்களின் பிடியில் சிக்கி உள்ளது. பல மாகாணங்களும், உள்ளூர் நிர்வாகங்களும் பொதுமக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு தவறி விட்டன.
டல்லாசில் ஒரு இளைஞனுக்கு நேர்ந்ததுபோல, நியுயார்க்கில் ஒரு பெண்ணுக்கு நேர்ந்ததுபோல அப்பாவி மக்கள் தாக்கப்படுகிறார்கள்.
சிறு வணிக உரிமையாளர்கள் தங்கள் கனவுகள் முற்றிலும் அழிந்து போவதை கண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரசுக்கு எதிராக துணிச்சலுடன் போராடி வருகிற நர்சுகள் வீடுகளுக்கு திரும்பிச்செல்ல பயப்படுகிறார்கள்.
நாட்டின் தலைநகரில் ஆபிரகாம் லிங்கன் நினைவுச்சின்னம், இரண்டாம் உலகப்போர் நினைவுச்சின்னம் அழிக்கப்பட்டுள்ளன. வரலாற்று சிறப்புமிக்க தேவாலயங்களில் ஒன்று தீ வைக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் கூட்டாட்சி அதிகாரி ஒருவர், ஆப்பிரிக்க அமெரிக்க சட்ட அமலாக்க வீரர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இதெல்லாம் அமைதியான போராட்டத்தின் எதிர்ப்பு நடவடிக்கைகள் அல்ல. இவை உள்நாட்டு பயங்கரவாத செயல்கள் ஆகும். அப்பாவி மக்களின் வாழ்க்கை அழிக்கப்படுவதும், அவர்களை ரத்தம் சிந்த வைப்பதும் மனித குலத்துக்கு எதிரான, கடவுளுக்கு எதிரான குற்றம்.
நாட்டின் சட்டங்களை நிலை நிறுத்துவதற்காகத்தான் பதவி ஏற்றிருக்கிறேன். அதைத்தான் நான் செய்வேன்.
ஜார்ஜ் பிளாய்டின் கொடிய மரணம், அமெரிக்க மக்களை உலுக்கி உள்ளது. ஜார்ஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படும். அவர் இறப்பு வீணாய் போகாது என்று டிரம்ப் கூறினார்.