கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா

Spread the love

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப நடைமுறைகளில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் உதவியை இந்தியா நாடி உள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீனா, தென்கொரியா, ஜெர்மனி உதவியை நாடும் இந்தியா
கோப்புபடம்
புதுடெல்லி:

இந்தியாவில் 21 நாள் ஊடரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். ஆனாலும்கூட கொரோனா வைரஸ் பரவுவது தொடர்கதையாக நீளுகிறது.

இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயாக பரவுகிற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

இதனால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சிறந்த நடைமுறைகள், தொழில் நுட்பங்கள், புதுமைகளை கையாள வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

இதுபற்றி 130 நாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியாக கடந்த திங்கட்கிழமையன்று விவாதித்தார்.

மேலும், கொரானா வைரஸ் பரவலின் தீவிர நிலையை வெற்றிகரமாக கடந்து வந்து, கெரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்தியுள்ள சீனா, தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் சிறப்பான தொழில்நுட்பத்துடன்கூடிய சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு இந்தியா விரும்புகிறது.

இது தொடர்பாக அந்த 3 நாடுகளிடம் எந்தெந்த துறைகளில் ஓத்துழைப்பை பெற முடியும், என்னென்ன மருத்துவ சாதனங்களை அவற்றின் தொழில் நுட்பத்துடன் வாங்க முடியும் என்பதை கண்ட றிவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை அணுகுமாறு சீனா, தென்கொரியா மற்றும் ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் பரவலான பரிசோதனை அணுகுமுறையையும், அறிகுறிகளுடன் கொரோனா பரவல் சந்தேகத்துக்கு உரியவர்களை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கவும் சிறப்பான விதத்தில் செயல்பட்ட தென்கொரியாவை பின்பற்ற இந்தியா விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதித்தவர்களின் தடங்களை அறிந்ததிலும், சிகிச்சைக்கான உத்தியை வகுத்ததிலும் தென்கொரியாவின் நடைமுறை உலகளவிலான அங்கீகாரத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டில் ஊரடங்கு உத்தரவுகூட பிறப்பிக்கப்படாமல் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வணிக நடவடிக்கைகள், பொருளாதார நடவடிக்கைகள் வழக்கம்போல செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டது.

சீனாவை பொறுத்தமட்டில் 80 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது. 3,300 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தனர். ஆனாலும், அதில் இருந்து மீண்டு வந்தது. புதிதாக இந்த வைரஸ் தொற்று ஏற்படுவது நின்றுள்ளது. இதில் சீனாவைவும், வேறு சில நாடுகளையும் இந்தியா முன்மாதிரியாக பார்க்கிறது. அந்த நாடுகளிடம் இருந்து சாதனங்களையும், தொழில்நுட்பத்தையும் வாங்க திட்டமிடுகிறது.

இதுபற்றி மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது,

“எதிர்காலத்துக்காக நாம் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. அதனால்தான் கிடைக்ககூடிய சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ சாதனங்களை வாங்க நாங்கள் நாடுகிறோம். இதற்காக உலகளாவிய சந்தையை தேடுகிறோம்” என குறிப்பிட்டார்.

அந்த வகையில் சீனாவிடம் இருந்து மருத்துவ சாதனங்களை கொள்முதல் செய்வதற்கு உரிய அதிகாரிகளை நாடுமாறு பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு சாத்தியப்படக்கூடிய அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பல முறை சீனா கூறி வந்திருப்பது நினைவுகூரத்தக்கது.

தற்போது சீனாவிடம் இருந்து 10 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகளை வாங்குவதற்கு, வினியோக நிறுவனங்களை இந்தியா தொடர்பு கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் ஜெர்மனியின் வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாகவும் இந்தியா பரிசீலித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், ஜெர்மனி தனது நாட்டில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனங்களை செயற்கை சுவாச கருவிகள் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபடுமாறு கூறியது. பரிசோதனைக்கூட வசதிகளை ஏற்படுத்துவதில் அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்பார்த்து, டிரம்ப் நிர்வாகத்துடன் அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பில் இருக்கிறது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவுடன் இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியும் உள்ளார்.

எப்படியாவது கொரோனா வைரஸ், சமூக அளவில் பரவுவதை தடுத்து விட வேண்டும் என்பதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page