கருப்பின நபர் ஜார்ஜ் பிளாய்ட்டின் மரணத்துக்கு நீதிக்கோரி அமெரிக்காவில் 10வது நாளாக ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகளால் கொல்லப்படுவது வழக்கமாகி உள்ளது.
இந்த நிலையில் அங்குள்ள மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கருப்பு இனத்தவர், கடந்த 25-ந் தேதி போலீசார் பிடியில் கொலை செய்யப்பட்டது, கருப்பு இன மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படுகொலை காட்சிகள் அடங்கிய வீடியோ அங்கு வைரலாகி அதிர வைத்தது.
ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.ஆனால், 4 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து நீதி வழங்க வேண்டும் என் கருப்பு இன மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து தொடர்புடைய 4 போலீஸ் அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது, கொலை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் மரண சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
மினியா பொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம் தற்போது நியூயார்க், பிலடெல்பியா, பென்சில்வேனியா, வாஷிங்டன், மிக்சிகன், கலிபோர்னியா உள்ளிட்ட இடங்களில் பற்றி எரிகிறது.
இதனிடையே, வாஷிங்டனில் வெள்ளை மாளிகையை சுற்றி புதிதாக அமைக்கப்படும் கான்கீரிட் தடுப்புகள் முன்பு நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில், ஜார்ஜ் பிளாய்டின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கட்டிடங்கள் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்டன.
மெக்சிகோவில் அமெரிக்க தூதரகம் வாயிலில் கருப்பு உடையணிந்த போராட்டக்காரர்கள் மெழுகுவர்த்தி ஏத்தி, பூங்கொத்துகள் வைத்து ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், போராட்டக்காரர்கள் மீது போலீசார் அத்துமீறும் புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி, போராட்டத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது. நியூயார்க்கில் உள்ள புபலோ நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடை உத்தரவை அமல்படுத்த நூற்றுக்கணக்கான போலீசார் போராட்டக் களத்துக்கு வந்தனர். அப்போது அங்கு வந்த 75 வயது மதிக்கத்தக்க முதியவரை, போலீசார் கீழே தள்ளினர். நிலை குலைந்து விழுந்த முதியவர் தலையில் அடிபட்டு ரத்தம் வழிந்தது. அந்த முதியவருக்கு உதவாமல் போலீசார் கடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ போராட்டக்காரர்களை மேலும் கொதிப்படையச் செய்துள்ளது.
‘போலீசாரால் கீழே தள்ளப்பட்ட முதியவர் குறித்த விவரங்கள் தெளிவாகத் தெரியவில்லை. அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாகவே உள்ளது. முதியவரைக் கீழே தள்ளிய இரண்டு காவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்’ என, புபலோ நகர மேயர் பைரோன் பிரவுன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன், ஜார்ஜ் பிலாய்ட் கொலை பற்றிய விவாதத்தில், அமெரிக்கர்களில் பெரும் பகுதியினர் ‘நல்ல மனிதர்கள்’ அல்ல. 10 முதல் 15 சதவிகித மக்கள் எங்கும் இருக்கிறார்கள், அவர்கள் நல்ல மனிதர்கள் அல்ல என்றார்.