அமெரிக்க கைதி விடுதலை; ஈரானுக்கு டிரம்ப் நன்றி: இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்பு என தகவல்

Spread the love

அமெரிக்க கைதியை ஈரான் விடுதலை செய்தது. இதற்காக ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார். இரு தரப்பு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு எனவும் கருத்து கூறினார்.

Michael White meets U.S. special envoy for Iran Brian Hook in Zurich, Switzerland, after White’s release from detention in Iran.

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டை சேர்ந்தவர், மைக்கேல் ஒயிட் (வயது 48). இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஈரான் நாட்டின் மஷாத் நகரில் உள்ள தனது காதலியை சந்திக்க சென்றார்.

ஆனால் அங்கு அவர் ஈரான் நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிடப்படாத குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு கடந்த ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இப்போது அவரை ஈரான் அரசு விடுதலை செய்துள்ளது.

ஈரான் நாட்டின் விஞ்ஞானி சிரஸ் அஸ்காரி என்பவர் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் ரகசியங்களை வியாபாரம் செய்ய முயற்சித்ததாக தண்டிக்கப்பட்டிருந்தார். அவரை அமெரிக்கா விடுதலை செய்தது. அதைத் தொடர்ந்து அவர் ஈரான் திரும்பி உள்ளார்.

இந்த தருணத்தில் அமெரிக்க கைதி மைக்கேல் ஒயிட்டை ஈரான் விடுதலை செய்திருக்கிறது. இவர் கடந்த மார்ச் மாதம் மருத்துவ காரணங்களையொட்டி தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு, டெக்ரானில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

இப்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ஒயிட் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுவிஸ் விமானத்தில் அவர் ஈரானில் இருந்து புறப்பட்டு விட்டார். வெளிநாடுகளில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள அனைத்து அமெரிக்கர்களையும் விடுவிப்பதற்கான பணியை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்” என குறிப்பிட்டார்.

அதைத் தொடர்ந்து ஈரானில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மைக்கேல் ஒயிட், ஜூரிச் நகரில் இருந்து தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

மைக்கேல் ஒயிட், ஈரானில் விடுவிக்கப்பட்டு, அமெரிக்கா வரும் செய்தி அறிந்து அவரது தாயார் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “ கடந்த 683 நாட்களாக என் மகன் மைக்கேல் ஒயிட் ஈரானில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தார். நான் ஒரு கனவாக வாழ்ந்து வந்தேன். அந்தக் கனவு முடிந்து விட்டது என்று அறிவிக்கும் பாக்கியவதியாக நான் இருக்கிறேன். என் மகன் அமெரிக்காவுக்கு பத்திரமாக திரும்பிக்கொண்டிருக்கிறார்” என கூறினார்.

மைக்கேல் ஒயிட், தனது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றுசேருவதை காண எதிர்நோக்கி இருப்பதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ குறிப்பிட்டார்.

மைக்கேல் ஒயிட்டை விடுதலை செய்திருப்பதற்கு ஈரானுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நன்றி ஈரான். இது ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உண்டு என்பதை காட்டுவதாக அமைந்துள்ளது” என கூறி உள்ளார்.

ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா 2018-ம் ஆண்டு விலகிக்கொண்டதில் இருந்து இரு நாடுகளிடையேயும் சுமுகமான உறவு இல்லை.

ஈராக்கில் இந்த ஆண்டு ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொன்றதைத் தொடர்ந்து இரு தரப்பிலும் மோதல் உச்சம் அடைந்ததும், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page