கருப்பு இன போராட்டக்காரர்களிடம் இருந்து வெள்ளை மாளிகையை பாதுகாக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளது.

வாஷிங்டன்,
அமெரிக்காவில் மினியாபொலிஸ் நகரில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் வெள்ளை இன போலீஸ் அதிகாரிகள் பிடியில் கடந்த 25-ந் தேதி கொல்லப்பட்ட சம்பவம், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தலைநகர் வாஷிங்டன் தொடங்கி நாடு முழுவதும் போராட்டம் வெடித்து, அதில் வன்முறை தாண்டவமாடியது. பல முறை போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன் திரண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பதுங்கு குழியில் டிரம்ப் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் இருந்து வெள்ளை மாளிகையை பாதுகாக்க ஏதுவாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகை வளாகத்தை சுற்றிலும் நேற்று முன்தினம் உயரமான கருப்பு நிற வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் வெள்ளை மாளிகையின் வடக்கே லாபாயெட் பூங்கா மற்றும் அதன் தெற்கே எலிப்ஸ் மற்றும் என்.டபிள்யு.15 மற்றும் 17 தெருக்களுக்கு இடையேயான பகுதி 10-ந் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என்று வெள்ளை மாளிகையை பாதுகாக்கும் ரகசிய சேவை படையினர் ஒரு அறிக்கையில் கூறி உள்ளனர்.
லாபாயெட் பூங்கா, ஆர்ப்பாட்டங்களுக்கான பாரம்பரிய இடமாக விளங்கி வந்தது. ஆனாலும் கடந்த சில நாட்களாக போலீஸ் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பல மோதல்கள் நடந்தள்ளன. பூங்கா அருகில் உள்ள தேவாலாயத்தில் விஷமிகள் தீ வைத்ததும், லாபாயெட் பூங்காவில் கூடிய போராட்டக்காரர்களை போலீசார் விரட்டியடித்ததும் நினைவுகூரத்தக்கது.