தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட, ஐந்து மாவட்டங்களில், அடுத்த, 24 மணி நேரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், வங்கக் கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சூழல் நிலவுகிறது.
இதனால், தென் மேற்கு பருவ மழை மேலும்தீவிரமடைய உள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:தமிழகம், புதுவையில், தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, அடுத்த, 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில், மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், இடியுடன் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் தெற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடலில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். லட்சத் தீவு, கேரள கடலோரப் பகுதி, அதையொட்டிய அரபிக் கடல் பகுதியில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், சூறாவளிக் காற்று வீசும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.வட மேற்கு மாவட்டங்களில், அதிகபட்ச வெப்பநிலை, 40 முதல், 42 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு, விவசாயிகள், பொதுமக்கள் பகல், 11:30 முதல் மாலை, 3:30 மணி வரை, திறந்தவெளிக்கு செல்ல வேண்டாம்.சென்னையில், வானம் மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 39 டிகிரி செல்ஷியசாக இருக்கும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.