சென்னை:
”படித்தவர்கள் அனைவரும், தங்களின் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்தினால், அத்தொழில் லாபகரமானதாகும்,” என, கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் நடந்த கலந்துரையாடலில், சத்குரு தெரிவித்தார்.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், பல்வேறு துறையினர் உரையாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, இந்திய கிரிக்கெட் விளையாட்டு வீரர், ரவிச்சந்திரன் அஸ்வின், நேற்று, ‘ஆன்-லைன்’ வழியாக கலந்துரையாடினார். இதில், கிரிக்கெட், விளையாட்டு சார்ந்த கேள்விகள், விவசாயிகள் தற்கொலை, கொரோனாவுக்கு பின் மக்களின் வாழ்க்கை முறை, காவிரி கூக்குரல் இயக்க செயல்பாடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து, கேள்வி எழுப்பினார்.
அவற்றுக்கு பதிலளித்த, சத்குரு பேசியதாவது: விவசாயிகள், 2 சதவீதம் பேர் மட்டுமே, தங்களின் பிள்ளைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த விரும்புகின்றனர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற, படித்தவர்கள் அனைவரும், தங்களின் குழந்தைகளை விவசாயத்தில் ஈடுபடுத்த வேண்டும்.
மண்ணை உணவாக மாற்றுவது, சாதாரண விஷயம் கிடையாது. இந்தியாவில் உள்ள, 140 கோடி மக்களுக்கும் உணவளிப்பது விவசாயிகள் தான். உலகிற்கு தேவையான, அனைத்து விளை பொருட்களையும், இங்கு விளைவிக்க முடியும். நாட்டின், 65 சதவீத விவசாய மக்கள் தொகையை சிறப்பாக பயன்படுத்தினால், உலகிற்கே நம்மால் உணவு அளிக்க முடியும். எனவே, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.