கழிவு பாட்டில்களில் இருந்து தரமான முக கவசம்: ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்

Spread the love

கழிவு பாட்டில்களில் இருந்து தரமான முக கவசததை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்கு அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தொடங்கி ஒவ்வொரு நாட்டு அரசும் கூறுகிறது.

இந்த நிலையில் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களைக்கொண்டு மலிவானதும், தரமானதுமான முக கவசம் ஒன்றை இமாசலபிரதேச மாநிலம், மண்டியில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.

இதற்கான காப்புரிமைக்கு விண்ணப்பித்தும் இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியாளர்கள் ‘பெட் பாட்டில்கள்’ என்று அழைக்கப்படுகிற சாதாரண கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை நொறுக்கி, கரைப்பான்கள் மற்றும் கரைசல்கள் மூலம் கரைத்து பயன்படுத்தி உள்ளனர்.

இதுபற்றி மண்டி ஐ.ஐ.டி.பேராசிரியர் சுமித் சின்கா ராய் கூறும்போது, “நாங்கள் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு உருவாக்கியுள்ள முக கவசம், என்-95 முக கவசம் மற்றும் மருத்துவ முக கவசம் போன்றவற்றுக்கு இணையானது ஆகும்” என்று குறிப்பிட்டார்.

பிளாஸ்டிக் பாட்டில்களில் உருவாக்கப்பட்ட முக கவசம் என்றதும், அது பாதுகாப்பானதுதானா என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த முக கவசம் தயாரிக்க பயன்படுத்துகிற நானோபைபர்கள் பாக்டீரியா மற்றும் தொற்று கூறுகளை தவிர்தது பொதுமக்களின் பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் என்றும், வணிக ரீதியில் தற்போது கிடைக்கிற முக கவசங்களை விட இது மூச்சு விட ஏதுவாக இருக்கும் என்றும் இதை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு முக கவசத்தை தயாரிப்பதற்கான மூலப்பொருள் செலவு ரூ.25 ஆகிறதாம். ஆனால் வணிக ரீதியில் ஏராளமாக தயாரிக்கிறபோது மூலப்பொருள் செலவு பாதியாக குறையும் என்று சொல்கிறார்கள்.

இந்த முக கவசம் சலவை செய்து மறு பயன்பாடு செய்யத்தக்கதாகும். 30 முறை மறு பயன்பாடு செய்யத்தக்கது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த முக கவசம் பற்றி மண்டி ஐ.ஐ.டி.பேராசிரியர் சுமித் சின்கா ராய் மேலும் கூறுகையில், “ முக கவச தயாரிப்பில் நானோபைபர்கள் அற்புதமாக செயல்படும். காற்றின் மூலம் பரவுகிற துகள்கள், மாசு போன்றவற்றை அகற்றும். மூச்சு விட வசதியாக இருக்கும். நானோபைபர்கள் அடிப்படையிலான இந்த முக கவசம், சிறிய துகள்களைக் கூட வடிகட்டி விடும்” என குறிப்பிட்டார்.

இந்த முக கவசத்தை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கு, வழக்கமான சுகாதார நடவடிக்கைகளை தவிர்த்து தனி நெறிமுறை பின்பற்றத்தேவையில்லை என உருவாக்கிய குழுவை சேர்ந்த ஆசிஷ் ககோரியா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page