கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 841 அரசு கட்டிடங்களில் 51 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலை பொதுப்பணித்துறை நடவடிக்கை

Spread the love

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனை உள்ளிட்ட 841 அரசு பிற துறை கட்டிடங்களில் 51 ஆயிரம் படுக்கை வசதிகளை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை அமைத்து தயார் நிலையில் வைத்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரத்யேக 22 அரசு மருத்துவமனைகளில் 9 ஆயிரத்து 381 படுக்கைகளும், மாவட்டங்களில் உள்ள 116 அரசு மருத்துவமனைகளில் 5 ஆயிரத்து 144 படுக்கைகள் உட்பட 14 ஆயிரத்து 525 படுக்கைகள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு உள்ளன.

தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கை வசதிகள் நீங்கலாக இவை அமைக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் நோயின் தன்மை தொடர்ந்து வீரியம் ஏற்பட்டு வருவதால் கொரோனாவுக்காக அரசு கட்டிடங்கள் குறிப்பாக கல்வி நிறுவனங்கள், வணிக வரித்துறை உள்பட 841 கட்டிடங்களில் 51 ஆயிரத்து 472 படுக்கைகளை போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறையினர் அமைத்து தயார் நிலையில் வைத்து உள்ளனர்.

இவற்றில் 25 ஆயிரம் படுக்கைகள் நோயாளிகள் பயன்படுத்தி வருகின்றனர். மீதம் 26 ஆயிரத்து 472 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த படுக்கைகள் அரசு பயன்பாட்டுக்காக கட்டப்பட்டு திறக்கப்படாத கட்டிடங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள், சமுதாய கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ளன.

எங்கு எவ்வளவு?

தஞ்சையில் 5 ஆயிரம் படுக்கைகள் இதில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 70 கட்டிடங்களில் 5 ஆயிரத்து 245 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர விருதுநகரில் 26 கட்டிடங்களில் 4,913, சென்னையில் 7 கட்டிடங்களில் 3,390, நாமக்கலில் 57 கட்டிடங்களில் 2,897, நாகப்பட்டினத்தில் 48 கட்டிடங்களில் 2,566, கரூரில் 67 கட்டிடங்களில் 2,488, திருவாரூரில் 21 கட்டிடங்களில் 2,050, ராமநாதபுரத்தில் 35 கட்டிடங்களில் 2,032, சிவகங்கையில் 50 கட்டிடங்களில் 1,879, தர்மபுரியில் 24 கட்டிடங்களில் 1,870, ஈரோட்டில் 57 கட்டிடங்களில் 1,845, கோவையில் 46 கட்டிடங்களில் 1782, திருவண்ணாமலையில் 7 கட்டிடங்களில் 1,755, புதுக்கோட்டையில் 26 கட்டிடங்களில் 1,590, கிருஷ்ணகிரியில் 31 கட்டிடங்களில் 1,561, திருச்சியில் 14 கட்டிடத்தில் 1,555, தூத்துக்குடியில் 15 கட்டிடத்தில் 1,326, கன்னியாகுமரியில் 18 கட்டிடத்தில் 1,014, மதுரையில் 17 கட்டிடத்திலும், விழுப்புரத்தில் 2 கட்டிடத்தில் தலா ஆயிரம் என படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

போர்க்கால அடிப்படையில்…

நோய் பரவல் அடுத்த நிலைக்கு சென்றால் அரசின் உத்தரவை ஏற்று போர்க்கால அடிப்படையில் பொதுப்பணித்துறை கூடுதல் வசதிகள் செய்து தர தயார் நிலையில் உள்ளது.

சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை உருவாக்கி அதற்குரிய வசதிகளை ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சைக்காகவே தனி வார்டுகளை உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது இவற்றில் ஒவ்வொரு படுக்கைகளுக்கு இடையே தடுப்புகள், கழிவறை மற்றும் அதற்கு தண்ணீர் வசதி, குடிநீர் வசதி, உரிய கழிவு நீர் தொட்டிகள், மின் வசதிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன. அத்துடன் வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.

கலெக்டர் குழு

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர்கள், மருத்துவத்துறை முதல்வர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தினசரி கூடி ஆய்வு செய்து தேவைப்படும் கட்டமைப்புகளை உடனுக்குடன் பொதுப்பணித்துறை மூலம் நிறைவேற்றி வருகின்றனர். பணிகளின் நிலவரம் குறித்து தினசரி பொதுப்பணித்துறை மூலமாக அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page