திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்ய புதிய விதிகளுடன் பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
திருமலை,
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் சூழலில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதுமுள்ள அனைத்து மதவழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. எனினும், கோவில்களில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், ஊரடங்கு உத்தரவின் தளர்வுகளில் ஒரு பகுதியாக, ஜூன் 8ந்தேதி முதல் கோவில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 8ந்தேதி முதல் சோதனை முறையில் தேவஸ்தான ஊழியர்கள், உள்ளூர்வாசிகள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து இன்று முதல் அனைத்து பொது பக்தர்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதற்காக திருப்பதியில் 3 வெவ்வேறு இடங்களில் தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டன. நாளொன்றுக்கு 3 ஆயிரம் டோக்கன்கள் மட்டுமே விநியோகிக்கப்பட இருந்த நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் 21 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டன.
டோக்கன்களை பெற்ற பக்தர்கள் இன்று முதல் வரும் 17ந்தேதி வரை தரிசனம் செய்வார்கள். மேலும் காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.
திருப்பதி கோவில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை, அனைத்து வாகனங்களையும் தூய்மைப்படுத்துவது, கொரோனா அறிகுறி இல்லாத மக்களுக்கே அனுமதி ஆகியவை கடைப்பிடிக்கப்படும்.
இதேபோன்று கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், ஒன்றுக்கு மேற்பட்ட உடற்கோளாறுகள் கொண்டோர் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.