நாட்டில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் கொரோனா தொற்று ஒப்பீட்டு அளவில் 1.09% அதிகம் ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப்புறங்களில் வசிப்போரை விட நகர்ப்புற மக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படும் ஆபத்து 1.09 சதவீதம் அதிகம் உள்ளது.
இதேபோன்று, கிராமப்புறங்களில் உள்ள குடிசைப்பகுதி மக்களை விட நகர்ப்புறங்களில் அமைந்துள்ள குடிசைப்பகுதிகளில் தொற்று ஏற்படும் ஆபத்து 1.89 அதிகம் உள்ளது. இதுவரை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான அளவுக்கு படுக்கைகள் உள்ளன. அதற்கு பற்றாக்குறை ஏற்படவில்லை என தெரிவித்து உள்ளது.
கொரோனா பாதிப்பு பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) அமைப்பின் பேராசிரியர் பார்கவா இன்று கூறும்பொழுது, மக்கள் தொகையில் பெருமளவிலான பிரிவினருக்கு தொற்று ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது என தெரிய வந்துள்ளது. ஆபத்தில் இருக்க கூடியவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது.
அதனால், சமூக இடைவெளி, கைகளை தூய்மைப்படுத்தி கொள்ளல் போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் தொடருகிறது. கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றை மாநிலங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய தேவை உள்ளது என கூறியுள்ளார்.