இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் நோக்கம் கிடையாது’ “தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை” எடப்பாடி பழனிசாமி பேட்டி

Spread the love

‘தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை‘ என்றும், ‘இறப்பு எண்ணிக்கையை மறைக்கும் நோக்கம் அரசுக்கு கிடையாது‘ என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம்,

சேலத்தில், ரூ.441 கோடி மதிப்பீட்டில் இரண்டடுக்கு மேம்பாலத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சுகாதாரத் துறை கொடுக்கும் புள்ளி விவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதாக கூறுகிறார்களே?

பதில்: அரசு ஆஸ்பத்திரிகளில் இறப்பவர்களின் கணக்கு அரசுக்கு தெரியும். தனியார் மருத்துவமனைகளிலிருந்து பெறப்படும் செய்தியையும் வைத்து அறிவிக்கப்படுகிறது. இறப்பு பற்றி மறைப்பது கிடையாது, அதை மறைக்கவும் முடியாது. வேறு எந்த மரணத்தினாலும் பிரச்சினை கிடையாது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறந்தார்கள் என்றால் அனைவருக்கும் தெரிந்துவிடும். இதை மறைக்க முடியாது.

இதை மறைப்பதனால் அரசுக்கு எந்தவித நன்மையும் கிடையாது. சுகாதாரத் துறை மூலமாக, நாள்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்களின் விவரங்களை தெளிவுபடுத்துகிறோம். இதில் ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக நாங்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறோம்.

கேள்வி: பரிசோதனையை அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: இதுவரை மொத்தம் 6 லட்சத்து 9 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்துள்ளோம். இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனையை மேற்கொண்ட மாநிலம் தமிழ்நாடு தான். அதுமட்டுமல்லாமல், நேற்றையதினம் (நேற்று முன்தினம்) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, மொத்த பாதிப்பு 36,841. இதில், எடுக்கப்பட்ட மாதிரிகள் 17,675. பரிசோதனை நிலையங்கள் 77 உள்ளது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,179. குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,008. நேற்று (நேற்று முன்தினம்) வரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 19,333.

இந்த கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 326. ஏற்கனவே புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக நோய் போன்ற பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் இறப்பு தான் அதிகமாக இருக்கிறது என்ற புள்ளிவிவரங்களை மருத்துவர்கள் அளிக்கின்றனர். கொரோனா தொற்றால், இந்தியாவில், மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாட்டில் தான் இறப்பு சதவீதம் மிகக் குறைவாக இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்து குணப்படுத்துவது தான் அரசின் முதல் கடமை. அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் எங்களுடைய அரசு செய்திருக்கின்றது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கான படுக்கை வசதிகளை நாம் செய்து கொடுத்திருக்கிறோம். சேலம் மாவட்டத்தில் மட்டும் 2,000 பேர் சிகிச்சை பெறக்கூடிய அளவுக்கு படுக்கை வசதிகள் செய்து வைத்திருக்கிறோம். அதுமட்டுமல்லாமல், நம்முடைய மாவட்டத்தில் மட்டும் கூடுதலாக சுமார் 5,000 படுக்கைகள் ஏற்பாடு செய்வதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தயார் நிலையில் இருக்கிறோம். இந்தியாவிலேயே, அதிகமாக, தமிழ்நாட்டில் தான் 3,384 வெண்டிலேட்டர்கள் இருக்கின்றது. மேலும், போதுமான அளவுக்கு செவிலியர்கள், மருத்துவர்களை நியமித்திருக்கிறோம். மருத்துவப் பணிகள் செய்யத் தேவையான மருத்துவம் சார்ந்த பணியாளர்களை புதிதாக நியமித்திருக்கிறோம்.

கேள்வி: கொரோனாவை சமூகப் பரவலாக கருதலாமா?

பதில்: சமூகப் பரவல் என்றால் அனைவருக்கும் தொற்று ஏற்படுவது. அப்படி சமூகப் பரவல் ஏற்பட்டிருந்தால் நாம் அனைவரும் இங்கு ஒன்றாக இருக்க முடியாது, எனவே சமூகப் பரவல் கிடையாது. சென்னை மாநகரம், மக்கள் அடர்த்தி அதிகமுள்ள நகரம், குறுகலான, சிறிய தெருக்களைக் கொண்டது. அங்கு 3 அடி சந்தில் 30 வீடுகள் உள்ளன. அப்பொழுது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அனைவருக்கும் பரவி விடும். இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடியது. இது ஒரு புதிய வைரஸ் நோய். இதற்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

மருந்து கண்டு பிடிக்காத சூழ்நிலையில், தங்களுடைய அனுபவத்தைக் கொண்டு, மக்கள் மனநிறைவு அடைகிற அளவுக்கு செயல்படும் நம்முடைய மருத்துவப் பணியாளர்களின் சேவை மகத்தானது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், பணியாளர்கள், உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்றும் காரணத்தினால் அனைத்து மாவட்டங்களிலும் இந்த நோய்ப் பரவலை கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம்.

வெளிநாட்டிலிருந்து, வெளி மாநிலங்களிலிருந்து, வெளியூர்களிலிருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தும்பொழுது அவர்களுக்குத் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதே தவிர, சேலம் மாவட்டத்தில் அதிகமான தொற்று இல்லை. அதுபோல், பல மாவட்டங்களில் கிடையாது.

கேள்வி: ஊரடங்கில் மேற்கொண்டு தளர்வு அளிக்க வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: ஏற்கனவே தேவையான தளர்வு கொடுத்துவிட்டோம்.

மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page