சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் 4 மாவட்டங்களில் 15 நாட்கள் தீவிர முழு ஊரடங்கா?தமிழக அரசு இன்று பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

Spread the love

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் 15 நாட்கள் தீவிர முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் உள்ளதா? என இன்று பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது.

தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவுகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக தொற்று ஏற்பட்ட 1,875 பேரில் 1,407 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையின் அண்டை மாவட்டங்களான செங்கல்பட்டில் 127 பேரும், திருவள்ளூரில் 72 பேரும் காஞ்சீபுரத்தில் 19 பேரும் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 398 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு நேற்று பலியான 23 பேரில் 21 சென்னையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஒருவர் தனியார் மருத்துவமனை டாக்டர் ஆவார். 2 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களால் பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இதனால் சென்னை உள்பட 4 மாவட்டங்களிலும் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றும், இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் பொதுமக்களிடையே தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் பொதுநல வழக்குகளை காணொலி காட்சி மூலம் நேற்று விசாரித்தனர். அப்போது, அரசு தரப்பில் அரசு பிளடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி இருந்தார். அவரிடம் நீதிபதிகள், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவது குறித்து திடீரென்று கேள்வி எழுப்பினார்கள்.

“சென்னையில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்களில் இந்த வைரஸ் தொற்று கொத்து கொத்தாக மக்களிடம் பரவுகிறது. இதை தடுக்க அரசு தீவிரமான நடவடிக்கை எதுவும் எடுக்கிறதா?” என்று அப்போது நீதிபதிகள் கேட்டனர்.

மேலும் நீதிபதிகள், “இதுதொடர்பாக நாங்கள் தாமாக முன்வந்து எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுக்கவில்லை. தமிழகத்தில் நாங்களும் (நீதிபதிகளும்) குடிமக்கள் என்ற முறையிலும், பொதுமக்களின் நலனை மனதில் கொண்டும் இந்த கேள்விகளை எழுப்புகிறோம். ஏனென்றால் மாநிலத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில்தான் அதிக தொற்று காணப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் 15 நாட்களுக்கு தீவிரமான முழு ஊரடங்கை அறிவிக்கும் திட்டம் எதுவும் தமிழக

அரசிடம் உள்ளதா? தற்போது தமிழக அரசு பின்பற்றி வரும் நடைமுறையில் ஏதாவது மாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா? கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த புதிய நடைமுறைகள் ஏதாவது அமல்படுத்தப்பட உள்ளதா?“ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அரசு பிளடர் ஜெயபிரகாஷ் பதில் அளிக்கையில், “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு கடந்த மே 31-ந் தேதி பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, அதில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றி வருகிறது. அந்த அரசாணையில் கூறப்பட்ட தளர்வுகளை தவிர, மற்றவை அனைத்தும் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. அதே நேரம், இதில் ஏதாவது மாற்றங்கள் செய்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டுதான் தெரிவிக்க வேண்டும்“ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், தீவிரமாக முழு ஊரடங்கை அமல்படுத்த திட்டம் உள்ளதா? என்பது குறித்து தமிழக அரசின் கருத்தை கேட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிக்குமாறு உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page