எல்லை பிரச்சினையை இந்தியாவும், சீனாவும் முறையாக கையாண்டு வருகின்றன என்று சீனா கூறியுள்ளது.

பீஜிங்,
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5-ந் தேதி இந்திய படைகளும், சீன படைகளும் மோதிக்கொண்டன. இதனால், அந்த பகுதியில் பதற்றம் நிலவி வந்தது.
கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கருத்தொற்றுமை ஏற்பட்டதால், எல்லையில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கிச் சென்றன.
இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இந்தியா-சீனா ராணுவ மேஜர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதில், எல்லையில் ஏற்கனவே இருந்த நிலையை முழுமையாக திரும்பச் செய்ய வேண்டும் என்றும், இந்திய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சீன ராணுவத்தினர் வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் குவா சுன்யிங்கிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
களநிலவரம் குறித்து என்னிடம் அதிகமான தகவல்கள் இல்லை. தூதரக வழிமுறை மற்றும் ராணுவ வழிமுறை மூலமாக இரு நாடுகளும் எல்லை பிரச்சினையை முறையாக கையாண்டு வருகின்றன.
இந்தியா-சீனா இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், எல்லையில் பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த 6-ந் தேதி, இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், இருநாட்டு தலைவர்களின் வழிகாட்டுதலை கருத்திற்கொண்டு, பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண முடிவு செய்யப்பட்டது.
எனவே, பிரச்சினையை விரைவாக தீர்க்கவும், எல்லையில் அமைதியை நிலைநாட்டவும் இரு நாடுகளும் ராணுவ மற்றும் தூதரகரீதியிலான தொடர்பை மேற்கொண்டு வருகின்றன. இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு இது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.