துபாயில் உருவாகும் மாதிரி செவ்வாய் கிரக நகரம் விண்வெளி ஆய்வு மைய அதிகாரி தகவல்

Spread the love

செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது.

 

துபாய்,

செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்க முன்னோட்டமாக துபாயில் மாதிரி செவ்வாய் கிரக நகரம் உருவாக்கப்படுகிறது. இது சர்வதேச ஆராய்ச்சி களுக்கு ஏற்ற புதிய வசதிகளுடன் கட்டப்படும் என்று விண்வெளி ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் வருகிற 2117-வது ஆண்டு அமீரகம் சார்பில் முதல் நகரம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அங்கு அமைக்கப்பட உள்ள கட்டிட அமைப்புகளை முன்னோட்டமாக துபாய் நகரத்தில் மாதிரி செவ்வாய் கிரக நகரமாக உருவாக்கப்பட உள்ளது. ஹோப் விண்கலம் ஏவப்பட்ட பிறகு அடுத்த திட்டமாக இது கையில் எடுக்கப்பட உள்ளது.

இதில் சர்வதேச அளவில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு ஏற்ற வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையத்தின் செவ்வாய் கிரக 2117-ன் திட்ட மேலாளர் அட்னன் அல் ரய்ஸ் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-

அமீரகத்தின் செவ்வாய் கிரக பயண திட்டமானது துபாய் ஆட்சியாளரும் அமீரக பிரதமரும், துணை அதிபருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படைகளின் துணை சுப்ரீம் கமாண்டரும், அபுதாபி எக்ஸிகியூடிவ் கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோரின் முயற்சியால் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஆகும்.

இந்த திட்டம் ஒரு 100 ஆண்டு திட்டமாகும். கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திட்டமானது அமீரக அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்காக அமீரக அரசு 2 ஆயிரத்து 200 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

உலகில் உள்ள நாடுகளிலேயே முதலாவதாக அமீரகம் சார்பில் செவ்வாய் கிரகத்தில் நகரத்தை உருவாக்குவது இதன் நோக்கமாகும். இதற்காக சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகளில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் ஒத்துழைப்பானது பெறப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டமாக அமீரகத்தின் சார்பில் இந்த ஆண்டில் வரும் ஜூலை மாதம் ஹோப் விண்கலம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ளது. இது அடுத்த (2021) ஆண்டில் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சிக்காக அந்த விண்கலமானது பயன்படுத்தப்படும். இதில் அங்கு உள்ள தகவலமைப்புகளை ஆராய்ச்சி செய்து படிப்படியாக நகரத்தை உருவாக்கும் முயற்சி செயல்படுத்தப்படும். செவ்வாய் கிரகத்தில் நகரத்தை அமைப்பதற்கு முன்பாக இங்குள்ள பாலைவனப்பகுதியில் செவ்வாய் கிரகத்தில் அமைய இருக்கும் கட்டிடம் மற்றும் கட்டுமானங்களை அமைத்து சோதனை செய்து பார்க்கும் விதமாக புதிய செவ்வாய் கிரக மாதிரி நகரம் ஒன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக 50 கோடி திர்ஹாம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த செவ்வாய் கிரக மாதிரி நகரத்தை அமைக்க துபாயின் புறநகரில் உள்ள பாலைவன பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு உள்ள கட்டிடங்களில் செவ்வாய் கிரகத்தில் உள்ளது போன்ற சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்.

அதில் உணவு, எரிசக்தி, தண்ணீர் மற்றும் பயிர்களை வளர்த்து ஆராய்ச்சி செய்யப்படும். மேலும் இந்த நகரத்தில் செவ்வாய் கிரக அருங்காட்சியகம் ஒன்று கட்டப்பட உள்ளது. இந்த நகரத்தை பயன்படுத்தி பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தலாம்.

தற்போது இதன் முதற்கட்ட கட்டிடக்கலை வரைபடம் அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளது. அனைத்து நாடுகளில் நடைபெறும் செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்பம் மற்றும் இட வசதிகளுடன் இந்த மாதிரி நகரம் கட்டப்பட உள்ளது. வரும் நவம்பர் மாதம் இதன் திட்ட பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page