ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது என்று மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்று வருகிறது. அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதி மந்திரி , மத்திய அரசு உயரதிகாரிகள் அனைவரும் காணொலி மூலம் பங்கேற்றுள்ளனர்.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு அபராதம் விதிக்கப்படாது என்று நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “ ஜிஎஸ்டி வரி கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் கிடையாது. வரியை முழுமையாக செலுத்தி இருந்தால் கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது. கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே 2017-ம் ஆண்டு ஜூலை முதல் 2020 ஜனவரி வரை காலத்திற்கான ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளன. இந்த காலத்திற்கான ஜிஎஸ்டி தாக்கலை தாமதக் கட்டணம் இன்றி செலுத்தலாம். அதற்கு முந்தைய காலத்திற்குரிய ஜிஎஸ்டி தாமதக் கட்டணம் 18 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிப்பதற்கான வழியாக புதிதாக செஸ் விதிப்பது குறித்தும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது.