கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அவமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு வேதனை தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்தும், மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்கள் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலும் சுப்ரீம் கோர்ட்டு, “கொரோனா நோயாளிகளுக்கான முறையான சிகிச்சை மற்றும் கொரோனாவால் இறந்தோர் சடலங்களை மருத்துவமனைகள் கவுரவத்துடன் கையாளுதல்“ என்ற தலைப்பில் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உள்ளது,
இது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, சமீப காலங்களில் இது தொடர்பாக நடைபெற்று வரும் சம்பவங்களை கருத்தில் கொண்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையில் அமர்வு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.
அதன்படி நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று காணொலி காட்சி மூலம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் நீதிபதிகள் கூறியதாவது:-
நாட்டில் குறிப்பாக டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையும், மருத்துவமனைகளில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து அவற்றை மரியாதைக்குறைவாக கையாளுவதும் மிகவும் அருவருக்கத்தக்கதாகவும், பயங்கரமாகவும், பரிதாபமாகவும், வேதனை அளிப்பதாகவும் உள்ளது.
இறந்தவர்கள் குறித்து அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிவிக்கப்படுவது இல்லை. இதனால் கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் அவர்களின் உறவினர்கள்கூட கலந்து கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டு உள்ளது. பல மாநிலங்களில் மத்திய அரசு வெளியிடும் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்படுவது இல்லை.
எனவே, மத்திய அரசும், மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை உள்ளிட்டவை தொடர்பான நிலைத்தகவல் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.
பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.