கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை நீடிக்கும் என்றும், ஆனால் பஸ்கள், சரக்கு வாகனங்கள் போக்குவரத்துக்கு தடை இல்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்து உள்ளது.

புதுடெல்லி,
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா அனைத்து மாநிலங்களுக்கும் எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள இந்த சமயத்தில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்படுவதாகவும், ஆனால் பயணிகளுடன் பஸ்கள் செல்லவோ, நெடுஞ்சாலைகளில் சரக்கு வாகனங்கள் செல்லவோ கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது என்றும் உள்துறை அமைச்சகம் ஏற்கனவே அறிவித்தது.
பொருட்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. அத்தியாவசிய சேவைகளுக்கு தடை இல்லை.
ஆனால் சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நெடுஞ்சாலைகளில் மக்கள் பயணிக்கவும், வாகன போக்குவரத்துக்கும் தடை விதித்து இருப்பதையும், இதனால் ஏற்பட்ட இடையூறையும் மத்திய உள்துறை அமைச்சகம் கவனத்தில் கொண்டு உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன்.
மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கவும், சமூக இடைவெளியை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும்தான், அத்தியாவசிய பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பா டு தொடர்ந்து நீடிக்கும்.
ஆனால் இந்த கட்டுப்பாடு சரக்கு வாகனங்களில் பொருட்களை ஏற்றுவதற்கோ, இறக்குவதற்கோ, மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கோ பொருந்தாது. பஸ்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டும், சரக்கு வாகனங்கள் சரக்குகளுடனும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்ல தடை எதுவும் கிடையாது.
இதேபோல் இரவில் பஸ், ரெயில், விமானங்களில் இருந்து இறங்கியவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு போய்ச் சேரவும் எந்த தடையும் இல்லை.
இதுபோன்ற போக்குவரத்தை தடுத்து நிறுத்த வேண்டாம் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு மாநில, யூனியன் பிரதேச அரசுகள் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.