கொரோனா தொற்று, குழந்தைகளை தொழிலாளர்களாக மாற்றும் ஆபத்துஎச்சரிக்கை மணி அடிக்கும் சர்வதேச அமைப்புகள்

Spread the love

இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கொடுமை இதற்கு முன் நேர்ந்தது இல்லை என்று அனைவரையும் கதற வைத்து விட்டது கொரோனா.

 


ஒன்றா, இரண்டா? கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தும் பாதிப்பைத்தான் சொல்கிறோம். எண்ணிலடங்கா பாதிப்புகள்…

இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு கொடுமை இதற்கு முன் நேர்ந்தது இல்லை என்று அனைவரையும் கதற வைத்து விட்டது கொரோனா.

200 நாடுகள் அல்லல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்.. இன்னொரு பக்கம் அதன் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு… மற்றொரு பக்கம் ஊரடங்கால் மக்களின் வேலை வாய்ப்புகள் பறிபோன பரிதாபம்… நாளைய உலகின் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று எதிர்பார்க்கப்படுகிற குழந்தைகளின் படிப்புக்கு ஏற்படுகிற பாதிப்பு… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

எல்லாவற்றிலும் கொடுமை, குழந்தைகள் தங்கள் இன்பமயமான குழந்தை பருவத்தை தொலைத்து தொழிலாளர்களாக மறப்போகிற அவலத்தை உலகம் பார்க்கப்போகிறது என்பதுதான்.

உயரும் ஆபத்து

கொரோனா வைரஸ் உலகை ஒரு கை பார்த்து வருகிற வேளையில் ஐ.நா.சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப்பும், சர்வதேச தொழிலாளர் அமைப்பும் கூ ட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன. அவற்றின் முக்கிய அம்சங்கள் இவை:-

* புத்தாயிரம் ஆண்டு முதல் (2000-ம் ஆண்டு) குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை உலக அளவில் 9 கோடியே 40 லட்சமாக குறைந்தது. ஆனால் இப்போது இந்த ஆதாயம், ஆபத்தை எதிர்நோக்கும் நிலையில் இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரப்போகிறது.

* குழந்தை தொழிலாளர்களாக ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இன்னும் கூடுதலான நேரம் வேலை செய்யும் நிலை வரும். இன்னும் மோசமான சூழலில் வேலை செய்கிற சூழல் உருவாகும். அவர்களில் பெரும்பாலோர், மோசமான உழைப்பு வடிவங்களுக்கு தள்ளப்படலாம். இது அவர்களுடைய ஆரோக்கியத்துக்கும், பாதுகாப்புக்கும் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும்.

* பெரும்பாலும் வீடுகளில் அதிகம் கிடைக்கும் தொழிலாளர்கள் குழந்தைகள்தான். குடும்பங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டு அதை சமாளிக்க கூடுதல் ஆதாரம் தேவைப்படுகிறபோது குழந்தைகள், தொழிலாளர்களாக உரு மாற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

பிரேசில், இந்தியா, மெக்சிகோ….

* பிரேசில் நாட்டில் கொரோனாவால் பெற்றோர்கள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். இதனால் குழந்தைகள் வேலைக்கு போய் தற்காலிக ஆதரவை தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிலை கவுதமாலா, இந்தியா, மெக்சிகோ, தான்சானியா பேனன்ற நாடுகளில் ஏற்பட்டு இருக்கிறது. இது ஆவணப்படுத்தப்பட்டும் இருக்கிறது.

* கொரோனா வைரசால் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதாலும், குழந்தைகள் தொழிலாளர்களாக மாற வழிவகுத்து இருக்கிறது. தற்காலிகமாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதால், 130 நாடுகளில் 100 கோடி குழந்தைகளின் படிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீண்டும் பள்ளிக்கூடங்கள் திறந்து அவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பித்தாலும், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாமல் போகலாம். காரணம், அதற்கான வசதி பெற்றோர்களுக்கு இல்லாமல்போவதுதான். இதன் விளைவாக அதிகமான குழந்தைகள் அபாயகரமான வேலைகளுக்கு தள்ளப்படுவார்கள். பாலின ஏற்றத்தாழ்வுகளும் மிகவும் தீவிரமாக வளரலாம். பெண்கள் குறிப்பாக விவசாயம், வீட்டு வேலைகளில் சுரண்டலுக்கு ஆளாவார்கள்.

* கொரோனா தொற்று நோய் குடும்ப வருமானத்தை அழிப்பதால், ஆதரவு இல்லாமல் பலர் குழந்தைகளை தொழிலாளர்களாக ஆக்கலாம் என்பது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைவர் கை ரைடர் கருத்தாக அமைந்துள்ளது.

வறுமை அதிகரிக்கும்…

* கொரோனா வைரஸ் தொற்று, வறுமையை அதிகரிக்கும். இதனால் குடும்பங்கள் உயிர் வாழ்வதற்கு கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்துவதால், குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

* வறுமையில் 1 சதவீத புள்ளி உயர்வு கூட, சில நாடுகளில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்தது 0.7 சதவீதம் உயர்வதற்கு வழி வகுக்கிறது என்று சில ஆய்வுத்தகவல்கள் சுட்டிக்காட்டுவதாக யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரிட்டா போர் கூறுகிறார்.

* வறுமை அதிகரிக்கும்போது, பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டு, சமூக சேவைகள் கிடைக்கும் தன்மை குறைகிறது. அதிகமான குழந்தைகள், தொழிலாளர் தொகுப்பில் தள்ளப்படுகிறார்கள்.

கொரோனாவுக்கு பிந்தைய உலகம்…

* கொரோனாவுக்கு பிந்தைய உலகை நாம் மீண்டும் கற்பனை செய்யும்போது, எதிர்காலத்தில் இதுபோன்ற புயல்களை தணிப்பதற்கு குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான சூழல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தரமான கல்வி, சமூக பாதுகாப்பு சேவைகள் மற்றும் சிறந்த பொருளாதாரம் வாய்ப்புகள் ஆகியவை திருப்புமுனையை ஏற்படுத்துபவையாக அமையும்.

* அமைப்பு சாரா தொழிலாளர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்கள், பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, வாழ்க்கை தர வீழ்ச்சி, சுகாதார அதிர்ச்சிகள், போதிய சமூக பாதுகாப்பின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுகிற வாய்ப்பு உள்ளது.

இப்படி குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுகிற அவலத்தை சுட்டிக்காட்டுகிற அறிக்கை அதற்கான தீர்வையும் படம் பிடித்து காட்டாமல் இல்லை.

என்னதான் தீர்வு என்கிறீர்களா?

விரிவான சமூக பாதுகாப்பு, ஏழை குடும்பங்களுக்கு கடன் உதவி, பெரியவர்களுக்கு கண்ணியமான வேலையை ஊக்குவித்தல், குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு செல்ல வைப்பதற்கு பள்ளி கட்டணங்களை நீக்குதல், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் ஆய்வுகள் போன்றவை நடக்க வேண்டும். அதற்கான வளங்களை உருவாக்க வேண்டும்.

இதெல்லாம் நடந்தால், குழந்தைகள் குழந்தைகளாக இருக்கலாம். அவர்கள் தொழிலாளர்களாக மாறும் அவலம் தவிர்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page