சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று பீஜிங்கில் பள்ளிகள் திறப்பு நிறுத்தம்

Spread the love

சீனாவில் புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பீஜிங்கில் பள்ளிகளை திறப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பீஜிங்,

சீனாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தலைநகர் பீஜிங்கில் 2 பேர் உள்பட அந்த நாட்டில் புதிதாக 10 பேருக்கு தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

முடிவுக்கு வந்து விட்டது கொரோனா என்று கருதப்பட்டு வந்த நிலையில், புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

56 நாட்களுக்கு பிறகு, தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் பீஜிங்கில் நேற்று மேலும் 2 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், இயல்பு நிலைக்கு திரும்பிக்கொண்டிருந்த பீஜிங்கில் அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பீஜிங்கில் புதிதாக நேற்று தொற்று உறுதி செய்யப்பட்ட 2 பேர் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் ஆவார்கள். 2 நாளில் 3 பேருக்கு பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பது, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த நகரம், கொரோனா பரவுவதை தடுக்க தனிமையில் வைக்கப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான சீன நாட்டினர் வெளிநாட்டில் தவித்திருந்து, திரும்பி வந்தாலும், அவர்கள் பீஜிங்கில் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. எல்லா விமானங்களும் பிற நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. திரும்பி வருபவர்கள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது நினைவுகூரத்தகுந்தது.

மீண்டும் பீஜிங்கில் கொரோனா தொற்று பரவத்தொடங்கி இருப்பதால் 1-வது கிரேடு முதல் 3-வது கிரேடு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதை நகர நிர்வாகம் நிறுத்தி உள்ளது.

பீஜிங்கில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர், பீஜிங்கிற்கு வெளியே சென்று வந்தது தெரிய வந்துள்ளது. இது அவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டறிய அதிகாரிகளை தூண்டி இருக்கிறது.

இதற்கு இடையே நேற்று முன்தினம் பீஜிங்கில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 2 பேருக்கு பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page