இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சம் தொடுவது எப்போது என்பது குறித்த ஆய்வுத்தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல பரவிக்கொண்டிருக்கிறது. பெருகி வரும் நோயாளிகளை கவனித்து சிகிச்சை அளிப்பதற்கு அரசுகள் உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கிக்கொண்டே போகின்றன.
தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கே செய்யப்பட்டுள்ள உள்கட்டமைப்பு வசதிகள் இவை:-
* நமது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரிகளின் மொத்த எண்ணிக்கை 958 ஆகும். அவற்றில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை, 1 லட்சத்து 67 ஆயிரத்து 883 ஆகும்.
* தீவிர சிகிச்சை பிரிவுகளில் 21 ஆயிரத்து 614 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 73 ஆயிரத்து 469 படுக்கைகளும் போடப்பட்டு உள்ளன.
* அர்ப்பணிக்கப்பட்ட 2,313 கொரோனா சுகாதார மையங்கள் இருக்கின்றன. அவற்றில் மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 37 படுக்கைகள் போடப்பட்டுள்ளன. அவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில் 10 ஆயிரத்து 748 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதியுடன் 46 ஆயிரத்து 635 படுக்கைகளும் இப்போது கிடைக்கின்றன.
* மேலும், 7,525 கொரோனா பராமரிப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 7 லட்சத்து 10 ஆயிரத்து 642 படுக்கைகள் போடப்பட்டுள்ளன.
* வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 494 ஆக இருக்கின்றன. மேலும் 60 ஆயிரத்து 848 வெண்டிலேட்டர்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மத்தியில் உச்சம்…
இந்த நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் எப்போது உச்சம் தொடும் என்பது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) செயல்பாட்டு ஆராய்ச்சி குழு ஒரு ஆய்வு நடத்தி உள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:-
* இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தை அடைவதற்கு 34 நாட்கள் என்பதை 74 நாட்கள் என தாமதம் ஏற்படுத்தி உள்ளது. எனவே நவம்பர் மாதம் மத்தியில்தான் உச்சம் தொடும். மேலும், தொற்று பாதிப்பு அளவை 97 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக குறைக்க உதவி உள்ளது. இதனால் சுகாதார உள்கட்டமைப்புகளை ஏற்படுத்துவற்கான அவகாசத்தை அளித்துள்ளது.
* ஊரடங்குக்கு பிறகு 60 சதவீத செயல்திறனுடன், பொது சுகாதார நடவடிக்கைகள் இயங்கும் நிலையில், அவை நவம்பர் முதல் வாரம் வரை தேவைகளை சந்திக்கிற அளவுக்கு இருக்கும். அதன்பின்னர் 5.4 மாதங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் போதாது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் 4.6 மாதங்களுக்கு போதாது. வென்டிலேட்டர்கள் 3.9 மாதஙகளுக்கு போதுமானதாக இருக்காது. ஆனால், இந்த பற்றாக்குறைகள், ஊரடங்கு போடப்பட்டதால் எதிர்பார்த்ததைவிட 83 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.
உயிரிழப்பு
* இந்தியாவில் தொற்றுநோய்க்கான மாதிரி அடிப்படையிலான் இந்த ஆய்வின்படி, ஊரடங்கு காலத்தில் நோயாளிகளை பரிசோதித்தல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்காக கட்டமைக்கப்பட்ட கூடுதல் திறனுடன், உச்ச பாதிப்பு அளவை 70 சதவீதம் குறைத்து, ஒட்டுமொத்த பாதிப்பை 27 சதவீத அளவுக்கு குறைக்கலாம்.
* கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்பு 60 சதவீதம் வரை தடுக்கப்பட்டது.
* ஊரடங்கைப் பொறுத்தமட்டில் அது கொரோனா தொற்று உச்சம் அடைவதை தாமதப்படுத்தும். தொற்றுக்கு பதில் அளிப்பதற்கு சுகாதார அமைப்புக்கு அவகாசம் வழங்கும். குறிப்பாக சோதனை செய்தல், நோயாளிகளை கண்டறிதல், தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல், தொடர்பு தடம் அறிதல் ஆகியவற்றை தற்போது செய்வது போல தடுப்பூசி கிடைக்கிறவரை தொடர்கிறபோது, தொற்றின் பாதிப்பு குறையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று நவம்பர் மத்தியில்தான் உச்சம் தொடும் என்று இந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.