பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய பத்திரிகையாளர் மீதான வழக்கை விடுமுறைநாளான நேற்று சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்தை கூறிய பத்திரிகையாளர் மீதான வழக்கை விடுமுறைநாளான நேற்று சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது.

புதுடெல்லி,
பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களை பிரதமர் மோடி தன்னுடைய வாக்கு வங்கிக்கு பயன்படுத்துகிறார் என்று மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா யூ-டியூப் சேனல் ஒன்றில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இதுகுறித்த புகாரின்பேரில் சிம்லா போலீசார் வினோத் துவா மீது தேசதுரோக சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யுமாறு பத்திரிகையாளர் வினோத் துவா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விடுமுறை நாளான நேற்று நீதிபதிகள் யு.யு.லலித், எம்.ஷந்தன கவுடர், வினித் சரண் ஆகியோர் காணொலி மூலம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின் இறுதியில் நீதிபதிகள், சிம்லா போலீசார் பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். ஆனால் வினோத் துவாவை அடுத்த மாதம் (ஜூலை) 6-ந் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர்.
வழக்கு தொடர்பாக வினோத் துவா போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த நீதிபதிகள், மத்திய அரசும் இமாசலபிரதேச அரசும் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
விடுமுறை நாளில் சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கை விசாரிப்பது இது முதன்முறை அல்ல. மராட்டிய மாநில கவர்னர் பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி பிரமாணம் செய்ய முடிவெடுத்ததற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
இதேபோல் வரலாற்று சிறப்பு மிக்க ராமஜென்மபூமி பாபர் மசூதி வழக்கில் நவம்பர் 9-ந் தேதி (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. மும்பை அர்ரே பகுதியில் மெட்ரோ நிலையத்தில் மரங்களை வெட்டுவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை அக்டோபர் 7-ந் தேதி (கோர்ட்டு விடுமுறை நாள்) விசாரித்தது.
எனவே, இதுபோன்று ஞாயிற்றுக்கிழமையன்று சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கை விசாரிப்பது முதன்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.