சென்னையில் தவறான முகவரியை கொடுத்துவிட்டு 277 கொரோனா நோயாளிகள் மாயமாகி உள்ளனர். இதனால் மற்றவர்களுக்கு தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

சென்னை,
சென்னையில் 31 ஆயிரத்து 896 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து உள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த மாதம் 23-ந்தேதி முதல் கடந்த 11-ந்தேதி வரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 277 பேர் திடீரென மாயமாகி உள்ளனர். இதில் கடந்த மாதம் 23 முதல் 30-ந்தேதி வரை 82 பேரும், 31-ந்தேதி முதல் கடந்த 6-ந்தேதி வரை 112 பேரும், 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை 83 பேரும் மாயமாகி இருக்கின்றனர்.
போலீசார் தேடுகிறார்கள்
மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாம்களில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் வீட்டு முகவரி, செல்போன் எண் போன்ற தகவலை தவறாக கொடுத்து தப்பியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பகுதிவாரியாக அந்தந்த போலீஸ்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுடன் மாயமானவர்களை போலீசார் தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறார்கள். 277 பேரும் தவறான வீட்டு முகவரி, செல்போன் எண் அளித்திருப்பதால் அவர்களை கண்டுபிடிக்கும் பணி போலீசாருக்கு சவாலாக அமைந்து உள்ளது. தற்போது கொரோனா தொற்றுடன் வெளியே சென்று உள்ளவர்களால், மற்றவர்களுக்கும் தொற்று உண்டாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
மாநகராட்சி உத்தரவை…
அரசு மருத்துவமனை, தனியார் ஆய்வகங்கள், நடமாடும் பரிசோதனை மைங்களில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் வீட்டு முகவரி, செல்போன், ஆதார் எண் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு சேகரிக்கப்பட்ட தகவல்கள் சரிதானா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் சமீபத்தில் உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த உத்தரவை முறையாக கடைபிடிக்காததே கொரோனா நோயாளிகள் தப்புவதற்கு வாய்ப்பாக அமைந்து உள்ளது.