பிளஸ்-1 மாணவர் சேர்க்கையை பள்ளிகள் தொடங்கக்கூடாது என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் ஏற்கனவே 600 மதிப்பெண் கொண்ட பாடத்தொகுப்பு அமலில் உள்ளது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் (2020-21-ம் ஆண்டு) கூடுதலாக 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பு அமலுக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் தங்களின் விருப்பத்துக்கேற்ப 600 மதிப்பெண் அல்லது 500 மதிப்பெண் கொண்ட பாடத்தொகுப்புகளை தேர்வுசெய்து கொள்ள முடியும்.
பள்ளிக்கல்வி துறையின் அறிவிப்புக்கு முரணாக பெரும்பாலான பள்ளிகள் குறைவான மதிப்பெண் கொண்ட தொகுப்பான 500 மதிப்பெண் கொண்ட புதிய பாடத்தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை நடத்தி வருவதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, இதுதொடர்பாக கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது
எந்த மேல்நிலைப் பள்ளிகளும் 500 மதிப்பெண் கொண்ட புதிய மேம்படுத்தப்பட்ட பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியை பெறாமல் மாணவர்சேர்க்கையை நடத்தக்கூடாது. 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதிகோரும் பள்ளிகள், அது தொடர்பான உரிய கருத்துருக்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர் அங்கீகாரம் காலாவதியான பள்ளிகளுக்கு புதிய பாடத்தொகுப்புக்கான அனுமதி வழங்கப்படாது. எந்த ஒருதனியார் பள்ளிகளும் மாணவர்கள் தேர்வு எழுத இருக்கும் பாடத்தொகுப்புக்கான அனுமதியை கட்டாயம் பெற்றிருக்கவேண்டும். புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமலே பள்ளியை நடத்துவதும் மாணவர்கள் நலனுக்கு ஊறுவிளைவிக்கும் செயல்பாடு ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.