மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் ரூ.1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சென்னை,
கொரோனா பரவல் அதிகமாக இருப்பதைத் தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம்(ஒரு பகுதி), திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் வருகிற 19-ந்தேதி முதல் 30-ந் தேதிவரை 12 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மீண்டும் தலா ரூ.1,000 வழங்கப்பட உள்ளது.
தலா ரூ.1000
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ரூ.1,000 நிவாரணத் தொகையை அரசு வழங்கும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு…
இந்தப் பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் ரூ.1,000 நிவாரணமாக அரசு வழங்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேரத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.