சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

பீஜிங்
லடாக் எல்லை பகுதியில் சீனா உடனான மோதலில் இந்திய ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 1975-ம் ஆண்டுக்குப் பிறகு சீனா உடனான மோதலில், இந்திய தரப்பில் உயிரிழப்பு ஏற்படுவது இதுவே முதன்முறையாகும். இரு தரப்பிலும் பதற்றத்தை தணிக்க மூத்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீப காலமாக லடாக் பிராந்தியத்தில் உள்ள எல்லை பகுதியில் சீனா – இந்தியா இடையே பதற்றமான சூழல் நிலவியதால் இரு தரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.
இதனை அடுத்து, பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இரு தரப்பிலும் படைகள் விலக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியாக படைகள் விலக்கப்பட்டு வரும் நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு இரு தரப்பு மோதல் நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய தரப்பில் 3 உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் இரு நாடுகளைச் சேர்ந்த படைப்பிரிவு தளபதி மற்றும் கமாண்டிங் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
எல்லையில் உள்ள இரு கண்காணிப்பு பகுதியில், ராணுவக்குவிப்பை குறைப்பது தொடர்பாக இந்த பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, ஏற்பட்ட இரு தரப்பு தாக்குதலில் ராணுவ மேஜர் மற்றும் இரு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த மோதலில் ஆயுதப் பயன்பாடு இல்லை என்றும், கைக்கலப்பு மற்றும் கல்வீச்சில் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் உடன் அவசர ஆலோசனையை நடத்தி வருகிறார்.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் கூறுகையில், இந்தியா ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு எல்லை பிரச்சினையை மேலும் சிக்கலுக்கு உரியதாக மாற்ற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சரின் பேச்சை மேற்கோள் காட்டி சீனாவின் குளோபல் டைம்ஸ்வெளியிட்டு உள்ள செய்தியில் “திங்களன்று இந்திய ராணுவம் சட்டவிரோதமாக இரண்டு முறை எல்லையைத் தாண்டி, சீன வீரர்கள் மீது ஆத்திரமூட்டும் தாக்குதல்களை நடத்தியதன் விளைவாக கடுமையான உடல் மோதல்கள் ஏற்பட்டன”
“சீனா இந்திய தரப்பில் தனித்துவமான பிரதிநிதித்துவங்களை பதிவு செய்துள்ளது, மேலும் அதன் முன்னணி ராணுவத்தை எல்லை மீறுவதிலிருந்தோ அல்லது எல்லை நிலைமையை சிக்கலாக்கும் ஒருதலைப்பட்ச நடவடிக்கை எடுப்பதிலிருந்தோ கண்டிப்பாக தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.