கொரோனா சிகிச்சைக்கு டெக்சாமெத்தசோன் என்ற மருந்தை பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

லண்டன்,
சீனாவில் தோன்றி உலகின் பல நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுலோரோகுவின் மருந்து கொரோனா சிகிச்சையில் நல்ல பலனை அளிப்பதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இருப்பினும் இந்த மருந்து கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு நல்ல தீர்வாக அமையும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது. ஆனால் நோயை குணப்படுத்தும் விகிதம் அதிகமாக இருப்பதால் இந்த மருந்தை அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில் உலகெங்கும் பல நாடுகளிலும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவும் இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.
இவர்கள் நடத்திய ஆய்வில் டெக்சாமெத்தசோன் என்ற மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்த போது நல்ல பலன் கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. இந்த மருந்து கொடுத்த போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வென்டிலேட்டரில் சிகிச்சை பெறும் மூன்றில் ஒருவர் உயிர் பிழைத்தது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மருந்தை முன்னரே பயன்படுத்தியிருந்தால் இங்கிலாந்தில் சுமார் 5000 இறப்புகளை தவிர்த்திருக்கலாம் என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து டெக்சாமெத்தசோன் மருந்தை உடனடியாக கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்த இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.