ரூ.3 கோடி மதிப்பீட்டில் பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு மணிமண்டபம்

Spread the love

பெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர் உள்பட 5 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 14.2.2019 அன்று சட்டப்பேரவை விதி எண்.110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்றும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு கன்னியாகுமரி மாவட்டம் தேரூரில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், அதிலேயே ஒரு நூலகமும் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதேபோல நீதிக்கட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்துக்கு திருச்சி மாவட்டத்தில் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என்றும், திரைப்படத்துறையிலும், பாரம்பரிய இசைத்துறையிலும் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பன்முக பங்களிப்பினையும், சாதனையையும் அங்கீகரிக்கும் வகையிலும், அவரது நினைவினை போற்றும் வகையிலும் தமிழக அரசால் திருச்சியில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

பெரும்பிடுகு முத்தரையர்

மேலும் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்தில் காவிரியின் குறுக்கே தடுப்பணை அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற, ராஜ வாய்க்கால் ஏற்படுத்திய அல்லாள இளைய நாயகரை பெருமைப்படுத்தும் வகையில், அப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, அல்லாள இளைய நாயகருக்கு ஜேடர்பாளையத்தில் குவிமாடத்துடன் உருவச்சிலை அமைக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதன்படி, திருச்சி மாவட்டம் கோ.அபிஷேகபுரத்தில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு ரூ.99 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டிலும், சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்கு ரூ.43 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டிலும் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு ரூ.42 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பீட்டிலும் அமைக்கப்பட உள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபங்களுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச்செயலகத்தில் இருந்தவாறு காணொலிக் காட்சி மூலமாக நேற்று அடிக்கல் நாட்டினார்.

மணிமண்டபத்துக்கு அடிக்கல்

மேலும் கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு ரூ.92 லட்சத்து 27 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம் வடகரையாத்தூர் கிராமம் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் இடக்கரையில் அல்லாள இளைய நாயகருக்கு ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள முழு உருவச்சிலையுடன் கூடிய குவிமாட மண்டபம் என மொத்தம் ரூ.2 கோடியே 99 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள 5 மணிமண்டபங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன், எஸ்.வளர்மதி, தலைமைச்செயலாளர் க.சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் பொ.சங்கர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page