கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருகிறது அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

Spread the love

கொரோனா விவகாரத்திலும் தி.மு.க. அரசியல் செய்து மக்களை குழப்பி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

மருத்துவ உட்கட்டமைப்பில் மிகவும் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இஸ்ரேல், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளே ஆச்சரியப்படும் விதத்தில் கொரோனாவுக்கு எதிராக இந்திய தேசம் இடையறாது போராடி வருகிறது.

அப்படிப்பட்ட இந்திய நாடே தமிழகத்தை மனமுவந்து பாராட்டும் வகையில் எளிமை சாமானியர் எடப்பாடி பழனிசாமியின் அரசு நோய் தடுப்பிலும், கொரோனாவை குணப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்படுகிறது.

கொரோனா தொற்றினால் ஏற்படும் மரண சதவீதத்தை உலகிலேயே குறைவான சதவீதத்திற்குள் நிறுத்தியதிலும், இந்தியாவிலேயே நாளொன்றுக்கு சுமார் 15 ஆயிரம் கொரோனா பரிசோதனைகளை நடத்துவதிலும், அதற்கான கொரோனா பரிசோதனை கூடங்களை இந்தியாவிலேயே அதிகளவில் அமைத்ததிலும் என நாட்டுக்கே வழிகாட்டும், திறமைமிக்க மாநிலமாக தமிழகத்தை முன்னெடுத்து வருகிறார் உழவன் வீட்டில் உதித்த ஒப்பில்லா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தி.மு.க. மக்களை குழப்புகிறது

அதேவேளையில் அரசியல் கடந்து இனம், மொழி, சாதிகளை மறந்து கொரோனாவை ஒழித்து கட்டிட ஓரணியில் திரண்டு, ஓர் கோட்டில் உழைக்கிறது இந்த மண்ணில் வாழ்கிற ஒட்டுமொத்த மானுட சமூகம். ஆனால் இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்கட்சிகளுக்கும் மாறாக கொரோனாவிலும் அரசியல் செய்து மக்களை குழப்பியும், இரவு, பகல் பாராது உழைக்கும் மருத்துவர்களை, செவிலியர்களை வருவாய் துறையினரை, காவல்துறையினரை, ஒட்டுமொத்தத்தில் மக்களுக்காக அரும்பாடுபடும் அரசு ஊழியர்களையெல்லாம் மனச்சோர்வு அடையச்செய்யும் வகையிலும், மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்கும் நோக்கத்திலும் எதிர்க்கட்சியான தி.மு.க. அதர்மத்தின் வழியில் அரசியல் செய்து அக்கிரமம் புரிந்து வருகிறது.

அபவாதம் செய்து ‘ஒன்றிணைவோம் வா‘ என அரசுக்கு எதிராக தன் கட்சியினரை தூண்டி விட்டு மு.க.ஸ்டாலின் நடத்திய அத்துமீறல்களால் தான் அவருடைய கட்சியை சார்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையே கொரோனாவுக்கு பலிகொடுக்க வேண்டிய பரிதாபம் நிகழ்ந்ததோடு, இன்னும் பலருக்கு கொரோனா பரவிடவும் காரணமாகி விட்டது.

மலிவான அரசியல்

தேன்தமிழ் அறப்பணி, தெய்வீக திருப்பணியோடு திரைகடலோடி திரவியம் தேடுகிற உன்னத முதல்-அமைச்சர் மீது, குடிமராமத்து பணிகளால் கரிகாலன் காலத்தை கண்முன்னே நிறுத்துகிற கடமை காவலர் மீது, கொரோனா காலத்திலும் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க சுமார் ரூ.15 ஆயிரம் கோடியிலான 17 உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு அவற்றை தொடங்கிடும் தூயவர் மீது அவதூறுகளையும், பழிகளையும் சுமத்தி மலிவான அரசியலில் ஈடுபடும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் தி.மு.க.வை தடயமின்றி அழிக்கப்போகிறது என்பது நிச்சயம்.

இதற்கு தி.மு.க.விலிருந்து அடுத்தடுத்து வெளியேறுகிற மூத்த நிர்வாகிகளே சாட்சி. எனவே இனியாவது மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு எதிராக, நரி சூழ்ச்சி செய்வதையும், பீகார்காரர் கொடுக்கும் பினாமி அறிக்கைகள் விடுவதையும் நிறுத்திக்கொள்ளவேண்டும். தமிழ்நாட்டு அரசியலில் இருந்து தன்னை அவர் குறைந்தபட்சம் கொரோனா ஒழியும் காலம் வரையிலாவது மக்கள் நலன் கருதி அரசியல் ரீதியாக தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதே தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் செய்கிற பேருதவியாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page