இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் சீண்டினால் பதிலடி கொடுக்க தயங்கமாட்டோம் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிகப்பட்ட 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்தாலோசனை நடத்தி வருகிறார். நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்றைய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் கலந்து கொண்டுள்ளனர். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
முன்னதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில், லடாக்கில் உயிரிழந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்று கூறினார்.
மேலும் அவர் பேசிய போது, “பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
“இந்தியா அமைதியை விரும்பும் நாடு ஆனால் சீண்டினால் எந்த சூழ்நிலையிலும் நாம் பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.