இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

புதுடெல்லி,
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பிரதமர் மோடி அறிவித்த ‘தற்சார்பு இந்தியா‘ திட்டத்தின் கீழ் பல்வேறு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அப்போது நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும் உரிமை தனியாருக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி இந்தியாவில் 41 நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் நிலக்கரி துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:-
நாம் நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தை மட்டும் தொடங்கவில்லை. பல ஆண்டுகளாக கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி துறையை அதில் இருந்து வெளியே கொண்டு வந்து இருக்கிறோம். இந்த சீர்திருத்த நடவடிக்கையின் மூலம் நிலக்கரி உற்பத்தியும், நிலக்கரி துறையும் தன்னிறைவை பெறும். இயற்கை வளங்களும், சுரங்க தொழிலும் நமது பொருளாதாரத்தின் முக்கியமான தூண்கள் ஆகும்.
உலகில் நிலக்கரி வளத்தில் இந்தியா 4-வ இடத்திலும், உற்பத்தியில் 2-வது இடத்திலும் உள்ளது. ஆனால் நாம் நிலக்கரியை ஏற்றுமதி செய்யவில்லை. ஆனால் உலகிலேயே அதிகமாக நிலக்கரி இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் நிலக்கரி சுரங்க தொழிலில் ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலக்கரி சுரங்கங்கள் மூலம் மாநில அரசுகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும்.
இந்தியாவில் நுகர்வும் தேவையும் கொரோனா பாதிப்புக்கு முன்பு இருந்த நிலையை நோக்கி வேகமாக முன்னேறுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் புதிய தொடக்கத்துக்கு இதை விட சிறந்த நேரம் இருக்க முடியாது. தற்போதுள்ள சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போது, இந்திய பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் தயாராக இருப்பது தெளிவாக தெரிகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.