சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி, அவரது மனைவிக்கு குரூப் 1 பணி ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும் என தெலுங்கானா அரசு அறிவித்து உள்ளது.

ஐதராபாத்,
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 15ந்தேதி இரவு இந்தியா மற்றும் சீன ராணுவத்துக்கு இடையே நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 35 பேர் பலியாகி இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
50 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய இந்த மோதலுக்கு சீனாதான் காரணம் என இந்தியா குற்றம் சாட்டி உள்ளது. லடாக் பிராந்திய எல்லையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இயல்பு நிலையை ஒருதலைப்பட்சமாக சீனா மீற முயன்றதாலேயே இந்த மோதல் ஏற்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த மோதலில் தெலுங்கானாவை சேர்ந்த கர்னல் சந்தோஷ் பாபு வீரமரணம் அடைந்து உள்ளார். அவரது மறைவை அடுத்து தெலுங்கானா முதல் மந்திரி கே. சந்திரசேகர் ராவ், சீன தாக்குதலில் உயிரிழந்த சந்தோஷ் பாபுவின் குடும்பத்தினருக்கு ரூ.5 கோடி இழப்பீடாக வழங்கப்படும்.
அவரது மனைவிக்கு குடியிருப்புக்கான பிளாட் ஒன்றும் மற்றும் குரூப் 1 பணி ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். இதேபோன்று கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் உயிரிழந்த 19 ராணுவ வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.