தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்தபடி இருப்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்று கேட்டதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
சென்னை,
கொரோனா பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
நோய்த்தொற்று பரவுவது குறையாததால் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டது. 5-வது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரங்கு வருகிற 30-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கிடையே மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கு தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் சென்னையிலும், அதையொட்டி செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அமைந்துள்ள புறநகர் பகுதிகளிலும் கடந்த 19-ந் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
30 படுக்கைகளுடன் சிறப்பு மையம்
ஊரடங்கு காலத்திலும் கொரோனா கட்டுக்கு அடங்காமல் பரவுவதால், தமிழகத்தில் வருகிற 30-ந் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வருமா? அல்லது மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்து உள்ளது.
இந்த நிலையில் சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக 300 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ஊரடங்கை நீட்டிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், “இதுவரை அப்படிப்பட்ட வாய்ப்பு இல்லை. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை குணம் அடையச்செய்யவேண்டும். அதற்கு சிகிச்சை எப்படி கொடுப்பது? அதற்கு வசதிகளை எப்படி செய்து கொடுப்பது? போன்றவைகளை அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படுத்திக்கொண்டிருக்கிறது” என்று பதில் அளித்தார்.
‘ஸ்பீட் பிரேக்கர்’
அவர் மேலும் கூறுகையில், சென்னையில், பல கட்சித் தலைவர்கள் எதற்கு இந்த ஊரடங்கு என்று கேட்கிறார்கள்? சாலைகளில் அதிகமான வாகனங்கள் செல்கின்றபொழுது விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு ‘ஸ்பீட் பிரேக்கர்’ அமைப்பது போல்தான் இந்த ஊரடங்கும் என்றார். அதுபோல் இந்த நோய் பரவலை தடுப்பதற்காகத்தான் இந்த ஊரடங்கு என்று தெரிவித்தார்.
“ஊரடங்கு என்பது இந்த நோய் பரவலை தடுப்பதற்காகத்தானேயொழிய, யாரையும் கஷ்டப்படுத்துவதற்கோ, சோதனை செய்வதற்காகவோ இல்லை. நோய் அறிகுறி இருப்பவர்கள் வெளியில் சென்றால் அதன் மூலம் மற்றவர்களுக்கும் அந்த நோய் பரவி விடும். ஆகவே இந்த ஊரடங்கு மூலமாக நாம் வெளியில் செல்வதை தவிர்க்கும் பொழுது மற்றவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படாமல் இருக்கும்” என்றும் அப்போது எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
சிகிச்சை கட்டணம்
கேள்வி:- கொரோனாவுக்கு சிசிக்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக சொல்லப்படுகிறதே?
பதில்:- வசதி இல்லாதவர்களுக்கெல்லாம் அரசாங்கத்தில் சிகிச்சை செய்து விடுகிறோம். வசதி இருக்கிறவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள். ஏழைகள், காப்பீட்டு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டால், காப்பீட்டு திட்டத்தின் மூலம் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்வதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
கேள்வி:- கொரோனா தொற்று சிகிச்சைக்கு அளிக்க 17,500 படுக்கை வசதிகள் போதுமானதா?
பதில்:- பரிசோதனைக்கு உட்படுகின்றபொழுது நோய்த்தொற்று இருந்தால் கூட 80 சதவீதம் நபர்களுக்கு அறிகுறிகள் வெளியில் தெரிவதில்லை. அவர்கள் ஒரு வாரத்துக்குள் குணம் அடைந்து சென்று விடுகிறார்கள். கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர்களுக்குத்தான் அறிகுறிகள் இருக்கிறது. அதில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் 7 அல்லது 8 சதவீதம் பேர் தான். அவர்களை மருத்துவமனையில் சேர்த்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் அடையச்செய்கிறார்கள்.
மு.க.ஸ்டாலின்
கேள்வி:- உயர்கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே?
பதில்:- அவரே இல்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறாரே.
கேள்வி: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிந்து, உடல்நலம் விசாரித்திருக்கிறாரே?
பதில்:- அவர் சொன்னால் என்ன செய்வது? பாதிக்கப்பட்டவர்கள் தான் சொல்லவேண்டும்.
கேள்வி:- சென்னையில் மட்டும் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருப்பதாக ஒரு மாயை ஏற்படுத்துவதாக எதிர்க்கட்சியினரால் கூறப்படுகிறதே?
பதில்:- வெளியில் உள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைவு. ஆனால் சென்னையில் இருந்து பல மாவட்டங்களுக்கு சென்றவர்களை பரிசோதிக்கும்போது, நோய்த்தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் வீடு திரும்பும் நிலையை உருவாக்கி இருக்கிறோம்.
இறைவனுக்குத்தான் தெரியும்
கேள்வி:- கொரோனா நோய் எப்போது முழுமையாக கட்டுப்படுத்தப்படும்? இதற்கு கால வரையறை ஏதாவது உண்டா?
பதில்:- இறைவனுக்குத்தான் தெரியும். நாம் டாக்டர் அல்ல. இது படிப்படியாகத்தான் குறையும். ஒழிக்க முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த நோயை தடுக்கத்தான் முடியும். இதற்கு ஒரே வழி, நம்மை நாம் கட்டுப்படுத்திக்கொள்வதுதான். இந்த நோய்க்கு மருந்து என்னவென்றால் ஒவ்வொருவரும் நோயினுடைய தன்மையை, வீரியத்தை அறிந்து கட்டுப்பாட்டுடன் இருந்தால், இந்த நோயை தடுக்க முடியும். அரசும் ஏற்கனவே பல வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. மக்களுடைய ஒத்துழைப்பின் மூலமாகத்தான் இந்த நோய் பரவலை தடுக்க முடியும்.
கேள்வி:- கொரோனாவுக்கு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் மூலமாக மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளார்களே?
பதில்:- முழுமையாக அங்கீகரித்து வரவேண்டும். அங்கீகரிக்காமல் யாருக்கும் எந்த மருந்தும் கொடுக்க முடியாது. அதை அளித்தற்குப்பின் பாதிக்கப்பட்டு விட்டால் அதற்கு யார் பதில் சொல்வது? அங்கீகரிக்கப்பட்ட பின்தான் அதன் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை குணம் அடையச்செய்ய முடியும்.
யாரையும் ஒதுக்கி வைக்கவில்லை
கேள்வி:- இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கி வைப்பவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது?
பதில்:- யாரையும் ஒதுக்கி வைப்பது கிடையாதே. இது சளி, காய்ச்சல் போன்ற ஒரு தொற்று தான். அதை குணமடையச்செய்வது நமது கடமை. சமூக இடைவெளி, சுத்தமாக இருப்பது குறித்து நடிகர்கள், முக்கிய பிரமுகர்களை வைத்து, இந்த நோயினுடைய வீரியம், இந்த நோய் வந்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்று தத்ரூபமாக தினந்தோறும் குறும்படங்கள் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். பொதுமக்கள் தான் இவைகளை கடைப்பிடித்து ஒத்துழைப்பை நல்கவேண்டும்.