இன்று சூரியகிரகணம்: கோவில்களில் நடை சாத்தப்படும்

Spread the love

இன்று சூரியகிரகணம் நிகழ உள்ளதால் கோவில்களில் நடை சாத்தப்படுகிறது.

 

சென்னை,

வானில் அபூர்வ நிகழ்வாக கங்கண சூரியகிரகணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிகழ்கிறது. இதனையொட்டி அனைத்து கோவில் நடைகள் சாத்தப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படுகிறது. சூரியகிரகணம் முடிந்த பின்னர் கோவில் சுத்தப்படுத்தப்பட்டு வழக்கமான பூஜைகள் நடத்தப்படுகிறது.

சூரியகிரகணம் இன்று காலை 10.22 மணிக்கு தொடங்கி பகல் 1.41 மணிக்கு நிறைவடைகிறது. இதனால் கோவிலில் வழக்கமாக நடக்கும் பூஜைகள் நிறுத்தப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமான பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு சில கோவில்களில் இணைதளம் மூலம் சிறப்பு பூஜைகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இன்று காலையில் சூரியகிரகணம் ஏற்படுவதால் கோவில் நடை சாத்தப்படுகிறது.

காலை பூஜைகளும் நிறுத்தப்படுகிறது. கிரகணம் முடிந்த பின்னர் நடை திறக்கப்பட்டு, கோவில் சுத்தம் செய்த பின்னர் வழக்கமான பூஜைகள் செய்யப்பட உள்ளன என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க இயக்குனர் சவுந்திர ராஜபெருமாள் கூறியதாவது:-

சந்திரன் சூரியனைவிட மிகவும் சிறியது எனினும் அது பூமிக்கு அருகே இருப்பதால் பெரியதாகத் தோன்றுகிறது. இதனால் தான் முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனை நிலவு முழுமையாக மறைக்கிறது.

வெகு தொலைவில் நிலவு இருக்கும் போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிடச் சற்று சிறியதாக இருக்கும். அப்போது கிரகணம் நேர்ந்தால் சூரியனைச் சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம்(வளையம்) போல சூரியனின் வெளிவிளிம்பு அதிகபட்ச கிரகணத்தின் போது வெளித்தெரியும் எனவே இதனை கங்கண சூரியகிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

இது இந்தியாவில் தெரியும், குறிப்பாக ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட் பகுதியில் தெரியும்.

கிரகணத்தின் பாதை மத்திய ஆப்பிரிக்காவில் தொடங்கி, பசிபிக் பெருங்கடலில் முடிவடைவதற்கு முன்பு சவுதி அரேபியா, வட இந்தியா மற்றும் தெற்கு சீனா வழியாக பயணிக்கிறது. கிழக்கு ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தெற்கு ஆசியாவின் பெரும்பகுதி முழுவதும் ஒரு பகுதி கிரகணம் தெரியும்.

வட இந்திய நகரங்களான டெல்லி, சாமோலி, டேராடூன், ஜோஷிமத், குருசேத்திரா, சிர்சா, சூரத்கல் போன்ற இடங்களில் தெரியும். தமிழகத்தை பொருத்தவரையில் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் பகுதி மட்டுமே தெரியும்.

சென்னையில் இன்று காலை 10.22 மணிக்கு தொடங்கி பகல் 1.41 மணிக்கு நிறைவடைகிறது. அதிக பட்ச கிரகணம் பகல் 11.58 மணிக்கு இருக்கும்.

வெறும் கண்ணால் சூரியனை நேரடியாக யாரும் பார்க்க கூடாது. சூரியனை நேரடியாக பார்ப்பதால் கண்பார்வை இழப்பு ஏற்படும்.

சூரியகிரகணத்தின் போது சூரியனை நேரடியாக பார்ப்பதற்காக தனியாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளை பயன்படுத்தலாம். அல்லது வெல்டிங்க கடைகளில் பயன்படுத்தப்படும் வெல்டரின் கண்ணாடி வழியாக மாணவர்கள் வீடுகளில் இருந்தபடியே பார்க்கலாம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் இந்த முறை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page