இந்தியாவில் கட்டுக்கடங்காத கொரோனா – பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

Spread the love

இந்தியாவில் ஒரே நாளில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் 15 ஆயிரத்து 413 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது, இது தொடர்ந்து 10-வது நாள் ஆகும்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டுவதற்கு 64 நாட்கள் ஆயின. அடுத்து 2 லட்சம் ஆவதற்கு 2 வாரங்கள் எடுத்துக்கொண்டது. அடுத்த 10 நாளில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை நேற்று 4 லட்சத்தை கடந்து 4 லட்சத்து 10 ஆயிரத்து 461 என்ற அளவை எட்டியது.

கடந்த 1-ந் தேதியில் இருந்து இதுவரையில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 926 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் மராட்டியம், தமிழகம், டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் தொற்று மிக அதிகளவில் இருந்துள்ளது.

தொற்று பாதிப்பில் தொடர்ந்து மராட்டியம் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. அங்கு பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 205 ஆகும். இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்து 845 ஆகும். மூன்றாம் இடத்தை பிடித்துள்ள டெல்லியில் 56 ஆயிரத்து 746 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை பொறுத்தமட்டில் குஜராத்தில் 26 ஆயிரத்து 680, உத்தரபிரதேசத்தில் 16 ஆயிரத்து 594, ராஜஸ்தானில் 14 ஆயிரத்து 536, மேற்குவங்காளத்தில் 13 ஆயிரத்து 531 பேருக்கு தொற்று உள்ளது.

மத்திய பிரதேசத்தில் 11 ஆயிரத்து 724, அரியானாவில் 10 ஆயிரத்து 223, கர்நாடகத்தில் 8,697, ஆந்திராவில் 8,452, பீகாரில் 7,533, தெலுங்கானாவில் 7,072, ஜம்மு காஷ்மீரில் 5,834, அசாமில் 4,904, ஒடிசாவில் 4,856, பஞ்சாப்பில் 3,952, கேரளாவில் 3,039 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

உத்தரகாண்டில் 2,301, சத்தீஷ்காரில் 2,041, ஜார்கண்டில் 1,965, திரிபுராவில் 1,186, லடாக்கில் 836, மணிப்பூரில் 777, கோவாவில் 754, இமாசலபிரதேசத்தில் 656. சண்டிகாரில் 404, புதுச்சேரியில் 286, நாகலாந்தில் 201, மிசோரமில் 140, அருணாசலபிரதேசத்தில் 135, சிக்கிமில் 70, தத்ரா நகர்ஹவேலி, டாமன், தியுவில் 68 ஆக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை உள்ளது. அந்தமான் நிகோபாரில் 47 பேருக்கும், மேகாலயாவில் 44 பேருக்கும் தொற்று உள்ளது.
தொற்று பாதிப்பை பொறுத்தமட்டில் அமெரிக்கா, பிரேசில், ரஷியாவை தொடர்ந்து நமது நாடு 4-ம் இடத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதுபோல சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்புவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. இதுவரை குணம் அடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 27 ஆயிரத்து 755 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 451 ஆக இருக்கிறது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையை விட சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 58 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 13 ஆயிரத்து 925 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன்மூலம் குணம் அடைந்தோர் அளவு 55.49 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 306 ஆகும். இதையடுத்து மொத்தம் பலியானோர் எண்ணிக்கையும் 13 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது. 306 பேர் பலியானதில் 91 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 77, தமிழகத்தில் 38, குஜராத்தில் 20, உத்தரபிரதேசத்தில் 19, மேற்கு வங்காளத்தில் 11, கர்நாடகத்தில் 8 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

மத்திய பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா 6, தெலுங்கானா, ஆந்திரா, அரியானாவில் தலா 5, ராஜஸ்தானில் 4, பீகாரில் 2 பேரும், உத்தரகாண்ட், சத்தீஷ்கார், ஒடிசாவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலியான 13 ஆயிரத்து 254 பேரில், மராட்டியம் முதல் இடம் வகிக்கிறது. அங்கு பலியானோர் எண்ணிக்கை 5,984 ஆக உள்ளது. இரண்டாவது இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு 2,112 பேர் இறந்துள்ளனர். மூன்றாவது இடம் வகிக்கும் குஜராத்தில் 1,638 பேர் உயிரிழந்துள்ளனர். நான்காவது இடத்தில் தமிழகம் இருக்கிறது. இங்கு பலியோனோர் எண்ணிக்கை 704 ஆகும்.

அந்த வரிசையில் தொடர்ந்து மேற்கு வங்காளம் (540), உத்தரபிரதேசம் (507), மத்திய பிரதேசம் (501), ராஜஸ்தான் (337), தெலுங்கானா (203), அரியானா (149), கர்நாடகம் (132), ஆந்திரா (101), பஞ்சாப் (98), ஜம்மு காஷ்மீர் (81), பீகார் (52), உத்தரகாண்ட் (27), கேரளா (21), ஒடிசா (12), ஜார்கண்ட் மற்றும் சத்தீஷ்கார் (தலா 11), அசாம் (9), இமாசலபிரதேசம் (8), புதுச்சேரி (7), சண்டிகார் (6), மேகாலயா, திரிபுரா மற்றும் லடாக் (தலா 1) உள்ளன.

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரப்படி, பலி எண்ணிக்கையில் உலகளவில் இந்தியா 8-வது இடத்தில் இருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான அரசு பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கை 722 ஆகவும், தனியார் ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கை 259 ஆகவும் மொத்தம் 981 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரத்து 730 ஆகும். இதுவரையில் சோதிக்கப்பட்டுள்ள மாதிரிகளின் எண்ணிக்கை 68 லட்சத்து 7 ஆயிரத்து 226 ஆக உள்ளது.

இந்த புள்ளி விவரங்கள் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையில் இடம் பெற்றுள்ளளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page