கொரோனாவை வீழ்த்துவதற்கு, பேதங்களுக்கு அப்பாற்பட்ட யோகாவின் வலிமை உதவுகிறது என சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,
உடல் நலத்தையும், மன நலத்தையும் ஒரு சேரப்பேணும் அற்புதக்கலை யோகா. இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா பற்றி ஐ.நா. சபையில் பிரதமர் நரேந்திர மோடி பேசி, சர்வதேச யோகா தினத்தை கடைப்பிடிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியபோது, அதை ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்டது.
அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 11-ந் தேதியன்று, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாட ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேறியது. முதல் யோகா தினம் 2015-ம் ஆண்டு, ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவிவருகிற நிலையிலும், நேற்று 6-வது யோகா தினம் இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டது. இந்த முறை யோகா கொண்டாட்டம், டிஜிட்டல் முறைக்கு மாறியது. அனைவரும் வீட்டில் இருந்தபடியே குடும்பத்துடன் யோகா என்ற அடிப்படையில் இந்த நிகழ்வில் இணைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 6-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
சர்வதேச யோகா தினம், ஒற்றுமையின் தினம். இது உலகளாவிய சகோதரத்துவத்தின் செய்தியை நமக்கு அளிக்கிறது. இந்த நாள் நாம் அனைவரும் ஒன்று என்பதையும், மனித தன்மையையும் காட்டும் நாள். இந்த நாளில் நம்மை ஒன்றிணைத்து இருப்பது யோகாதான். நமக்கு இடையேயான இடைவெளியை இணைக்கும் பாலமாக யோகா திகழ்கிறது..
கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்தில், என் வாழ்க்கை, என் யோகா நிகழ்வில் உலகமெங்கும் இருந்து பங்கேற்பது, யோகாவில் மக்கள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. நமது வேலையை சரியாக செய்வதும், ஒருவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதும் கூட யோகாவின் வடிவம்தான்.
சரியான உணவை சாப்பிடுவதும், சரியான விளையாட்டுக்களை விளையாடுவதும், தூங்குவதற்கும், விழிப்பதற்கும் சரியான பழக்கங்களை கொண்டிருப்பதுவும், உங்கள் வேலையை செய்வதும் உங்கள் கடமைகளை ஆற்றுவதும் யோகாதான்.
கர்மயோகத்தின் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வைத்தேடிக்கொள்ள முடியும். மற்றவர்களுக்கு சுயநலமின்றி உதவுவதும் கர்மயோகம்தான். கர்மயோகம் என்பது இந்தியாவினுள் புதைந்துள்ள உணர்வு ஆகும். தேவை ஏற்படுகிறபோதெல்லாம், இந்தியாவின் தன்னலமற்ற தன்மையை உலகம் கண்டுள்ளது.
யோகா மற்றும் கர்மயோகத்தின் அடிப்படையில் மக்கள் செயல்படுகிறபோது தனி நபராக, சமூகமாக, உலகமாக சக்தி பல மடங்கு பெருகுகிறது. நாம் இந்த உணர்வுடன், நமது ஆரோக்கியத்துக்காக, நம் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்துக்காக நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு உறுதி எடுத்துக்கொள்வோம். ஒரு உணர்வுள்ள குடிமகனாக, நாம் ஒரே குடும்பமாக, ஒரே சமூகமாக ஒன்றுபட்டு முன்னோக்கி நடைபோடுவோம்.
யோகா இனம், நிறம், பாலினம், மதம், நாடு என்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டது. யோகா, ஆரோக்கியமான ஒரு கிரகத்துக்கான நமது தேடலை மேம்படுத்துகிறது. யோகா, ஒற்றுமைக்கான சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. யார் வேண்டுமானாலும் யோகா பயிற்சி செய்யலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு இப்போது யோகாவின் தேவையை உலகம் உணர்கிறது. நமது நோய் எதிர்ப்புச்சக்தி பலமாக இருந்தால், அது இந்த நோயை தோற்கடிப்பதில் மாபெரும் உதவியாக அமையும்.
நோய் எதிர்ப்புச்சக்தி பெருக்குவதற்கு யோகாவில் பல்வேறு முறைகள் உள்ளன. பல்வேறு ஆசனங்கள் இருக்கின்றன. இந்த ஆசனங்கள் எல்லாம், நமது உடல் வலிமையை அதிகரிக்கும். நமது வளர்சிதை மாற்றத்தை வலுப்படுத்தும்.
பிரணாயாமம், மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. யோகாவில் ஷீட்டாலி, கபல்பதி, பிராஸ்திகா போன்ற எண்ணற்ற வடிவங்கள் உள்ளன. யோகாவின் இந்த வடிவங்கள் எல்லாம், நமது உடலில் சுவாசம் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. நாம் அனைவரும் நமது அன்றாட வாழ்வில் பிரணாயாமத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உலகமெங்கும் உள்ள கொரோனா நோயாளிகள், யோகாவின் இந்த நுட்பங்கள் தரும் நன்மையை பெறுகின்றனர். கொரோனாவை வீழ்த்துவதற்கு யோகாவின் வலிமை அவர்களுக்கு உதவுகிறது. யோகா பயிற்சியை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதைச் செய்வதற்கு ஒருவருக்கு நேரமும், சிறிது இடமும்தான் தேவை.
யோகா நம் முன் உள்ள சவால்களை சந்திப்பதற்கு நமக்கு உடல் வலிமையை தருவதோடு, மன சம நிலையையும், உணர்வு ரீதியிலான ஸ்திரத்தன்மையையும் தருகிறது. நாம் நம்முடைய ஆரோக்கியத்தையும், நம்பிக்கையும் வளர்த்துக்கொள்ள முடிந்தால், உலகம் ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான மனித நேய வெற்றியைக் காணும் நாள் வெகு தொலைவில் இல்லை. இதைச் செய்து முடிப்பதற்கு யோகா நிச்சயம் உங்களுக்கு உதவும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.