கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு

Spread the love

கொரோனா நெருக்கடி காலத்தில்‘உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது’ என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


பீஜிங்,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயலாளரும், உஸ்பெகிஸ்தான் நாட்டு முன்னாள் வெளியுறவு மந்திரியுமான விளாடிமிர் நோரோ பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

கொரேனாவை எதிர்கொள்வதற்காக இந்தியா இதுவரை 133 நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விரிவான நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும், இத்தகைய மருந்து ஏற்றுமதியில் ஈடுபடுவது இந்தியாவின் பெருந்தன்மையை காட்டுகிறது.

இது ஒரு மாபெரும் சக்தியின் (வல்லரசு) நடத்தைக்கு தகுதியான மற்றும் பொறுப்பான எடுத்துக்காட்டு ஆகும். அதேநேரம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளுக்கு பரஸ்பர ஆதரவு மற்றும் நன்றியுணர்வையும் வெளிப்படுத்துகிறது. அந்தவகையில் கொரோனாவால் எழுந்துள்ள இந்த நெருக்கடி காலத்தில் உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டு வருகிறது.

கொரோனாவை பற்றிய சர்வதேச சமூகத்தின் ஆய்வு மற்றும் தடுப்பூசி உருவாக்கத்தில் இந்தியாவின் மிகுந்த திறமை வாய்ந்த விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களால் சிறப்பான பங்களிப்பை வழங்க முடியும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். இந்தியா இன்று பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச முன்முயற்சிகளுக்கு காரணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த காரணமும் உள்ளது. ஏனெனில் மருந்து மற்றும் சுகாதார மேலாண்மையில் இந்தியாவிடம் சிறந்த அனுபவம் மற்றும் ஆழ்ந்த ஞானம் உள்ளது. உயர்ந்த தரம், மலிவு விலை மருந்துகள், உபகரணங்கள் மற்றும் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன.

பொது மருந்துகள் தயாரிப்பில் உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா விளங்குகிறது. உலக மருந்து உற்பத்தியில் 20 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது இதைப்போல உலகின் தடுப்பூசி தேவையில் 62 சதவீதத்தை இந்தியா நிறைவேற்றுகிறது. ஏராளமான நாடுகளுக்கும் குறிப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு உறுப்பு நாடுகளுக்கும் மருத்துவ உதவி வழங்குவதில் இந்தியா சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. இவ்வாறு விளாடிமிர் நோரோவ் தெரிவித்தார்.

8 நாடுகளை கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page