டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா – கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரம்

Spread the love

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதற்காக கடைகளை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


சென்னை,

தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார், அனைத்து மூத்த மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சில்லரை மது விற்பனை கடைகளில், ஒரு கடைக்கு தலா 2 கேமராக்கள் வீதம் 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் கொள்முதல் செய்ய டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு, அரசு தரப்பில் இருந்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட மேலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் அதிக விற்பனையாகும் கடைகள், ஏற்கனவே திருட்டு முயற்சி நடந்த கடைகள், சட்டம்ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் ஏற்பட்ட கடைகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தனியாக அமைந்துள்ள அதிக விற்பனை நடைபெறும் கடைகள் உள்ளிட்ட காரணிகளை கருத்தில்கொண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு கடைகளை தேர்வு செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்ட மேலாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்காக கடைகளை தேர்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மண்டலம்

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் 535 கண்காணிப்பு கேமராக்களும், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டலத்தில் 450 கண்காணிப்பு கேமராக்களும், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை மண்டலத்தில் 755 கண்காணிப்பு கேமராக்களும், சேலம், தர்மபுரி, நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, அரக்கோணம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சேலம் மண்டலத்தில் 565 கண்காணிப்பு கேமராக்களும், திருச்சி, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, கடலூர், கரூர், திருவாரூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டலத்தில் 695 கடைகளும் என 3 ஆயிரம் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page