சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலானது. இதனால் நகரில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. சாலைகள் முழுவதும் வெறிச்சோடின. சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி திரிவோரை போலீசார் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து பிடித்தனர்.

சென்னை,
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகத்திலும் 5-ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அதிக பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் ஆகிய 4 மாவட்டங்களிலும் 19-ந்தேதி முதல் முழு ஊரடங்கு அமலாகி இருக்கிறது.
அதேவேளை மக்கள் பாதிப்பை தவிர்க்கும் வகையில் மளிகை கடைகள், மருந்தகங்கள், காய்கறி, பழ கடைகள், பால் விற்பனை நிலையங்கள் செயல்பட்டன. முழு ஊரடங்கு காரணமாக சாலைகளில் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமும் வெகுவாக குறைந்திருக்கிறது. அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்காக செல்வோர் மற்றும் உரிய அனுமதிச்சீட்டு (பாஸ்) பெறப்பட்ட வாகனங்கள் மட்டுமே சாலைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
தீவிர முழு ஊரடங்கு
இந்தநிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் எந்தவித தளர்வுகளும் இல்லாத தீவிரமான முழு ஊரடங்கு 21 மற்றும் 28-ந்தேதிகளில் (ஞாயிற்றுக்கிழமை) அமல்படுத்தப்படும் என்றும், அப்போது தேவையில்லாமல் சாலையில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தளர்வுகள் இல்லாத தீவிர முழு ஊரடங்கு நேற்று அமலானது.
இதையொட்டி சென்னையில் நேற்று கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. முழு ஊரடங்கிலும் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டல்கள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகங்கள், அலங்கார பொருட்கள் விற்பனையகங்கள் என அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. மளிகை கடைகளும், காய்கறிபழக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்களும் நேற்று முழுவதுமாக மூடப்பட்டிருந்தன. மருந்தகங்கள், மருத்துவமனைகள், பால் நிலையங்கள் உள்ளிட்ட மிக அத்தியாவசமான இடங்கள் மட்டுமே செயல்பட்டன. மீன், கோழி மற்றும் ஆட்டிறைச்சி கடைகளுக்கு ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைகள் அடைப்பு
பரபரப்பாக செயல்பட்டு வந்த சென்னையின் வர்த்தக தலமான தியாகராயநகர் பகுதி நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ரங்கநாதன் சாலையில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டதால், அந்த தெரு ஆள் அரவமின்றி அமைதியாக காணப்பட்டது. அதேபோல பாண்டிபஜார், பாரிமுனை, புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி உள்ளிட்ட நகரின் வணிக பகுதிகள் கடைகள் அடைக்கப்பட்டு அமைதியாக காட்சி அளித்தன.
சாலைகளை போல தெரு முனைகள் மற்றும் முக்கிய சந்திப்புகளிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. போலீசார் அந்த பகுதியில் அடிக்கடி ரோந்து சுற்றிக்கொண்டு யாராவது தேவையில்லாமல் நடமாடுகிறார்களா? என்பது குறித்து கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதேபோல மெரினா, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், பெசன்ட்நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாதவாறு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.
வெறிச்சோடிய சாலைகள்
ஏற்கனவே முழு ஊரடங்கையொட்டி நகரின் அண்ணாசாலை, மெரினா காமராஜர் சாலை, சேப்பாக்கம் வாலாஜா சாலை, தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்ப்பேட்டை டி.டி.கே.சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தீவிர முழு ஊரடங்கான நேற்று நகரின் அனைத்து பிரதான சாலைகள் மற்றும் இணைப்பு சாலைகள் முடக்கப்பட்டன. அந்தவகையில் சென்னை நகரில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னை திருமங்கலத்தில் போக்குவரத்து போலீசார் சாலையில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை மடக்கி பிடித்து அபராதம் வசூலித்தனர். அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல நகரின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் கண்கொத்தி பாம்பாக கண்காணித்து சாலையில் தேவையில்லாமல் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுத்தனர். அதேவேளை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக செல்வோரை போலீசார் அனுமதித்தனர்.
மக்கள் முழு ஒத்துழைப்பு
சென்னையின் நகர்ப்புறங்கள் போலவே எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம், மணலி, திருநின்றவூர், ஆலந்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலையோர கடைகளும் இல்லை.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முதன்முதலில் ஊரடங்கு அமல்படுத்திய சமயத்தில் என்ன நிலை இருந்ததோ, அதேபோலவே தற்போதும் சென்னையில் ஒரு அமைதி நிலவியது. மக்களும் ஊரடங்குக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் விதத்தில் வீட்டிலேயே தஞ்சம் அடைந்திருந்தனர். தீவிர முழு ஊரடங்கையொட்டி மளிகை சாமான்கள் உள்ளிட்ட தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொண்டதால் வீட்டை விட்டு மக்கள் வெளியே வராமல் அமைதி காத்தனர். அந்தவகையில் முழு ஊரடங்கை போலவே, அரசால் அறிவிக்கப்பட்ட தீவிர முழு ஊரடங்கும் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். மீண்டும் இதேபோல ஒரு முழு ஊரடங்கு வருகிற 28-ந்தேதி சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது