அரசின் தீவிர நடவடிக்கையால் கொரோனாவில் இருந்து 54 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

சென்னை,
சென்னை கொளத்தூரில் உள்ள ஜவஹர் நகரில் கொரோனா தடுப்பு கண்காணிப்பு பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர், 200 களப்பணியாளர்களுக்கு, வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு கண்டறியும் கருவிகளை வழங்கினார். கொரோனாவில் இருந்து குணம் அடைந்து பணிக்கு திரும்பிய 3 மாநகராட்சி ஊழியர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 சதவீதம் பேர் அரசின் தீவிர நடவடிக்கையால் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். திரு.வி.க.நகர் மண்டலத்தில் 3 ஆயிரத்து 440 பேருக்கு தொற்று ஏற்பட்டதில் 2 ஆயிரத்து 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இங்கு 94 குடிசை பகுதிகளும், 2 ஆயிரத்து 300 தெருக்களும் உள்ளன. இந்த பகுதிகளில் 1,050 பணியாளர்கள் முறையான பயிற்சி பெற்று களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அரசின் தீவிர நடவடிக்கைகளை பின்பற்றி கொரோனா வைரசை ஒழிக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மண்டல கண்காணிப்பு அதிகாரி அருண் தம்புராஜ் உடனிருந்தார்.
திருவொற்றியூர் மண்டலம்
இதைத்தொடர்ந்து அமைச்சர் ஆர்.வி.உதயகுமார் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்திற்கு சென்றார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல அதிகாரி சுதன், காவல்துறை துணை கமிஷனர் ஆதிமூலம் உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.