இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், இதில் 2½ லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்து 40 ஆயிரமாக உயர்ந்துள்ள நிலையில், இதில் 2½ லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக 24 மணி நேரத்தில் 11 ஆயிரம் பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளனர்.
சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் உள்ள 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி லட்சக்கணக்கானோரின் உயிரை பறித்துள்ள கொரோனா தனது பரவல் வேகத்தை இன்னும் கூட்டிக் கொண்டு உலா வருகிறது. இதனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் உலகம் முழுவதும் 1.83 லட்சம் பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது.
இதுவரை தன்னை கட்டுப்படுத்தவோ, அழிக்கவோ எந்தவித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்ற மமதையிலும், அரசு எவ்வளவோ அறிவுறுத்தியும் அதை கேட்காமல், தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரிந்து மக்கள் கொரோனாவுக்கு கைகொடுத்து உதவுவதாலும் இந்த வைரஸ் தனது கொடிய கரத்தை விரித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.
இங்கு ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரவ தொடங்கிய கொரோனா தற்போது மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. முன்பைவிட அதிக மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாலேயே பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் தகவல்படி நேற்று முன்தினம் வரை 71 லட்சத்து 37 ஆயிரத்து 716 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்குள் 14 ஆயிரத்து 933 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 40 ஆயிரத்து 215 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 1-ந் தேதி முதல் நேற்று வரையிலான 23 நாட்களுக்குள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதம் பேர் மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியாவில் புதிதாக 312 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் இந்த ஆட்கொல்லி வைரசின் பிடியில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 11 ஆக உயர்ந்து இருக்கிறது.
இதில் மராட்டிய மாநிலத்தில் மட்டும் 6,283 பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். டெல்லியில் 2,233 பேரும், குஜராத்தில் 1,684 பேரும், தமிழகத்தில் 833 பேரும், உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்காளத்தில் தலா 569 பேரும், மத்தியபிரதேசத்தில் 521 பேரும், ராஜஸ்தானில் 356 பேரும், தெலுங்கானாவில் 217 பேரும், அரியானாவில் 169 பேரும், கர்நாடகாவில் 142 பேரும், ஆந்திராவில் 111 பேரும், பஞ்சாபில் 101 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 85, பீகாரில் 55, உத்தரகாண்டில் 28, கேரளாவில் 21, ஒடிசாவில் 15, சத்தீஸ்காரில் 12, ஜார்கண்டில் 11, அசாமில் 9, இமாசலபிரதேசம் மற்றும் புதுச்சேரியில் தலா 8, சண்டிகாரில் 6, கோவா, மேகாலயா, திரிபுரா மற்றும் லடாக்கில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.
கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகரித்து வரும் வேளையில், இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி மேற்கூறிய அதே 24 மணி நேரத்துக்குள் 10 ஆயிரத்து 994 பேர் சிகிச்சையின் மூலம் குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி உள்ளனர். இதனால் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 48 ஆயிரத்து 189 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1 லட்சத்து 78 ஆயிரத்து 14 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையுடன், அதில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையையும் (அடைப்புக்குறிக்குள்) காணலாம்.
மராட்டியம்- பாதிக்கப்பட்டவர்கள் 1,35,796 (குணமடைந்தவர்கள் 67,706), தமிழ்நாடு-64,603 (35,339), டெல்லி-62,655 (36,602), குஜராத்-27,825 (19,909), உத்தரபிரதேசம்-18,322 (11,601), ராஜஸ்தான்-15,232 (11,910), மேற்குவங்காளம்-14,358 (8,687), மத்தியபிரதேசம்-12,078 (9,215), அரியானா-11,025 (5,916), கர்நாடகா-9,399 (5,740), ஆந்திரா-9,372 (4,495), தெலுங்கானா-8,674 (4,005), பீகார்-7,825 (5,781), ஜம்மு காஷ்மீர்-6,088 (3,531), அசாம்-5,586 (3.521), ஒடிசா-5,303 (3,863), பஞ்சாப்-4,235 (2,825), கேரளா3,310- (1,749), உத்தரகாண்ட்-2,402 (1,521), சத்தீஸ்கார்-2,303 (1,513), ஜார்கண்ட்-2,137 (1,469), திரிபுரா-1,237 (782), மணிப்பூர்-898 (250), கோவா-864 (152), லடாக்-847 (136), இமாசலபிரதேசம்-727 (437), சண்டிகார்-411 (322), புதுச்சேரி-383 (149), நாகாலாந்து-280 (141), மிசோரம்-141 (9), அருணாசலபிரதேசம்-139 (21), தாதர்நகர் ஹவேலி-91 (27), சிக்கிம்-78 (29), அந்தமான் நிகோபார் தீவு-48 (37), மேகாலயா-44 (37).
மேற்கூறிய இந்த தகவல்கள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவர பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.