ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும் தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது என காங்கிரஸ் மீது பா ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.
புதுடெல்லி
கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 5 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 76 பேர் காயம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
லடாக் எல்லை மோதல் குறித்து சமூக வலைதளங்களில் காங்கிரஸ்- பா,ஜனதா தலைவர்கள் மோதி வருகின்றனர்
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இந்தியாவின் வீரர்களை அவமதிக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரசை கேட்டு கொண்டார். மேலும் முன்னாள் பிரதமரின் ஆட்சிக் காலத்தில் 600 சீன ஊடுருவல்கள் நடந்ததாகக் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சிதம்பரம், தனது டுவிட்டரில் 2015 முதல் 2264 சீன ஊடுருவல்களை விளக்க தற்போதைய பிரதமரிடம் கேளுங்கள்? அவர் அந்த கேள்வியைக் கேட்கத் துணிய மாட்டார் என்று நான் நினைக்கிறேன்.
காங்கிரஸ் ஆட்சியில் சீன ஊடுருவல்கள் இருந்தன, ஆனால் எந்தவொரு இடமும் ஆக்கிரமிக்கப்படவில்லை, இந்திய வீரர்கள் உயிரிழக்கவும் இல்லை என கூறினார்.
மன்மோகன் சிங் கருத்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ப.சிதம்பரம் ஆகியோர் கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு ஜே.பி.நட்டாவும் பதிலடி கொடுத்து வருகிறார்.
இந்த சூழலில் பா.ஜனதா தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
ஒரு ராஜ பரம்பரையும் அவர்களுடைய விசுவாசிகளும் எதிர்க்கட்சி என்றாலே அந்த ஒரு குடும்பம்தான் என்று மனதில் பெரும் மாயையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஒரு குடும்பம் பல்வேறு தந்திரங்களை மக்களிடம் வீசுகிறது, அவர்களின் விசுவாசிகளும் போலி கதைகளை நம்புகிறார்கள். சமீபத்தில் அந்த எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கேள்விகளையும் கேட்டது.
எதிர்க்கட்சியின் கேள்வி கேட்பது உரிமை. சமீபத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஆரோக்கியமான விவாதங்களும் நடந்தன. பல எதிர்க்கட்சித் தலைவர்களும் தங்களது மதிப்புமிக்க ஆலோசனைகளை வழங்கினர். தேசத்தை முன்னோக்கி அழைத்துச் செல்லும் பாதையை தீர்மானிப்பதில் அவர்கள் மத்திய அரசை முழுமையாக ஆதரித்தனர்.
ஒரு குடும்பம் மட்டுமே விதிவிலக்காக இருந்தது. யார் என யூகித்துக்கொள்ளுங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபட்ட அந்த ஒரு குடும்பம் முழுமையான எதிர்க்கட்சிக்கு சமமாகிவிட முடியாது.
ஒரு வாரிசுக் குடும்பத்தின் நலன்கள் அனைத்தும் தேசத்தின் நலன்கள் ஆகிவிட முடியாது. நம்முடைய ராணுவத்துக்கு தேசமே ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவிக்கிறது. ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டும் இதுதான் நேரம். குடும்பத்தின் 9-வது வாரிசு இன்னும் காத்திருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்தின் தவறான செயல்களால் நம்முடைய தேசத்தின் நிலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர்களை இழந்துவிட்டோம். சியாச்சின் பனி மலை கிட்டத்தட்ட போய்விட்டது. இன்னும் ஏராளம். அவர்களை இந்ததேசம் நிராகரித்ததில் ஆச்சரியமில்லை. இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்