கர்நாடகாவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியில் 8.48 லட்சம் மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதுகின்றனர்.
பெங்களூரு,
சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு பின்பு உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பின்பு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமலானது. நோய் தொற்று அதிகரித்த நிலையில், ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கால் நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த ஏப்ரலில் நடைபெற வேண்டிய தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டன. தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திர சேகர ராவ், கொரோனா பாதிப்பு எதிரொலியாக மாணவர்கள் தேர்வு எழுதுவது சாத்தியமில்லை என கூறி 10ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார்.
10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் என அறிவிக்கப்பட்டனர். தமிழகத்தில் இதே நிலை தொடர்ந்தது. இதனால், இந்த ஜூனில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொது தேர்வு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அவர்களது காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகை பதிவேடு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பில் கூறினார்.
இந்தியா முழுவதும் கொரோனா பரவி வருகின்ற நிலையில், கர்நாடகாவில் நாளை 10ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற உள்ளது. இதுபற்றி கர்நாடக சுகாதார மந்திரி பி. ஸ்ரீராமுலு செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாளை முதல் 10ம் வகுப்புக்கான பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை, 8 லட்சத்து 48 ஆயிரத்து 203 மாணவர்கள் எழுதுகின்றனர்.
தேர்வு எழுத வரும் மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திட வேண்டும். அவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். இதுபற்றி கல்வி மந்திரியுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தி ஆலோசனை மேற்கொண்டேன். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் மிக கவனமுடன் கையாளப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.