பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா வைரஸ் கொரோனில், சுவாசரி மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
புதுடெல்லி
பதஞ்சலி நிறுவனம் நேற்று ‘கொரோனில்’ மற்றும் ‘சுவாசரி’ என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்ய பாலகிருஷ்ணா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் அமைச்சகத்திற்கு தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ராம்தேவின் பதஞ்சலி நாட்டுக்கு ஒரு புதிய மருந்தை வழங்கியிருப்பது ஒரு “நல்ல விஷயம்” ஆனால் அதற்கு அவரது ஆயுஷ் அமைச்சகத்தின் சரியான அனுமதி தேவை என மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் கூறினார்,