இந்தியாவில் வேலையில்லா விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நோய் தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், ஊரடங்கு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள் முடங்கின. பலரது வேலைவாய்ப்பு பறிபோனது.
இந்நிலையில், இந்தியாவில் வேலையில்லா விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த மையத்தின் மேலாண் இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறும்பொழுது, கடந்த 21ந்தேதியன்று வாரமுடிவில், நாட்டில் வேலையில்லா விகிதம் ஊரடங்கிற்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது.
கடந்த மே மாதம் 3ந்தேதி வரை 27.1 சதவீதம் என்ற அளவில் இருந்த இந்த விகிதம் 8.5 ஆக குறைந்துள்ளது என கூறினார்.
இதேபோன்று நகர்ப்புறங்களில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வேலையில்லாத நிலை உச்சம் அடைந்திருந்தது. இதனால் இந்த விகிதம் 25.83 சதவீதம் என்ற அளவில் இருந்தது. பின்பு இந்த விகிதம் கடந்த 12ந்தேதி முடிவில் 11.2 சதவீதம் ஆக குறைந்தது.
எனினும், ஊரடங்கிற்கு முந்தைய காலகட்டத்தில் இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலையில்லா விகிதம் சராசரியாக 9 சதவீத அளவில் இருந்தது. இதனை விட நடப்பு விகிதம் சற்று உயர்ந்தே காணப்படுகிறது என்றும் அவர் கூறினார்.